தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளில் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் நுழைவு வகுப்பில் 25 விழுக்காடு மாணவர் சேர்க்கைக்கு ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இது குறித்து மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் கருப்பசாமி அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி உள்ள கடிதத்தில், "சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் 2020-21ஆம் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அனைத்து பள்ளிகளும் ஆரம்ப வகுப்பில் மாணவர் சேர்க்கைக்கு உரிய இடங்களில் விவரத்தை மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு ஆகஸ்ட் 17ஆம் தேதி அளித்துள்ளனர். தங்கள் பள்ளிகளில் 25 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் கீழ் எத்தனை மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என்ற விவரத்தை ஆகஸ்ட் 26 ஆம் தேதி அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சேர்க்க விரும்பும் பள்ளியில் ஆரம்ப நிலை வகுப்பு எல்.கே.ஜி அல்லது ஒன்றாம் வகுப்பில் சேர்ப்பதற்கு ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் செப்டம்பர் 25ஆம் தேதி வரை rte.tnschool.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். பள்ளியில் சேர்வதற்கு விண்ணப்பம் செய்த மாணவர்களின் தகுதியான விண்ணப்பங்கள் செப்டம்பர் 30ஆம் தேதி மாலை 5 மணிக்கு பள்ளி கல்வித்துறை இணையதளத்திலும், பள்ளியின் அறிவிப்பு பலகையிலும் வெளியிடப்படும்.
ஒரு பள்ளியில் உள்ள இடத்திற்கு அதிகமாக மாணவர்கள் விண்ணப்பித்திருந்தால் அவர்களில் காலியாக உள்ள இடத்திற்கு குலுக்கல் முறையில் அக்டோபர் ஒன்றாம் தேதி தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் பெயர் பட்டியல் அக்டோபர் மூன்றாம் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும்" என அதில் கூறியுள்ளார்.