சென்னை: பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களிடம் ஆபாசமாக பேசி, தவறான வழியில் கொண்டு சென்றதாக பப்ஜி மதனுக்கு எதிராக ஏராளமானோர் புகார் அளித்தனர்.
அந்த புகார்களின் அடிப்படையில், பப்ஜி மதனுக்கு எதிராக மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார், கடந்த ஆண்டு ஜூன் மாதம் வழக்குப்பதிவு செய்தனர். பெண்களை ஆபாசமாக சித்தரித்தல், ஆபாசமாக பேசுதல், தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், தடை செய்யப்பட்ட செயலியை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து கடந்தாண்டு ஜூன் 18ஆம் தேதி, தர்மபுரியில் தலைமறைவாக இருந்த பப்ஜி மதன் கைது செய்யப்பட்டு, புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது ஏராளமான புகார்கள் வந்ததால், அவரை சைபர் குற்றவாளி எனக் கூறி, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர், உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை அண்மையில் சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இந்நிலையில், ஜாமீன் கோரி பப்ஜி மதன் தாக்கல் செய்த மனுவை சென்னை முதன்மை நீதிமன்ற அமர்வு நேற்று முன்தினம்(27.4.2022) தள்ளுபடி செய்தது.
இதையடுத்து ஜாமீன் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பப்ஜி மதன் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு இன்று (ஏப்.29) வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், கடந்த 10 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், தன் மீதான குண்டர் சட்டத்தை உயர் நீதிமன்றம் ரத்து செய்துவிட்டதால், ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் வாதிடப்பட்டது. இதையடுத்து மதனின் ஜாமீன் மனு குறித்து சைபர் கிரைம் பிரிவு காவல்துறை, 10 நாட்களில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு