சென்னை: பப்ஜி விளையாட்டின் மூலம் ஆபாச பேச்சுக்களால் இளைய சமுதாயத்தினரை தவறாக வழிநடத்துவதாக யூடியூபர் மதன் மீது மத்திய குற்றப்பிரிவுக்கு ஏராளமான புகார்கள் குவிந்தன.
அதனடிப்படையில் மதன், அவரது மனைவி கிருத்திகா ஆகிய இருவர் மீதும் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் துறையினர் இருவரையும் கைது செய்தனர்.
1,600 பக்க குற்றப்பத்திரிகை
பின்னர் கிருத்திகா ஜாமினில் விடுவிக்கப்பட்டார். கடந்த ஜூலை 6ஆம் தேதி, மதன் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டார். இதனையடுத்து 32 புகார்களின் அடிப்படையில் மதன், அவரது மனைவி கிருத்திகாவுக்கு எதிராக 1,600 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை கடந்த ஆகஸ்டு மாதம் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
தற்போது, புழல் சிறை வளாகத்தில் உள்ள விசாரணை கைதிகள் பகுதியில் பப்ஜி மதன் வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், முதுகு வலியால் மதன் கடுமையாக பாதிக்கப்பட்டதை அடுத்து, சிறை வளாகத்தில் இருந்த மருத்துவமனையில் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதி
இந்நிலையில், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள கைதிகளுக்கான பிரிவில் மதன் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு முதுகு வலிக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: IND vs NZ: 372 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி - தொடரை கைப்பற்றியது