மருத்துவம் சார்ந்த எம்பிபிஎஸ் போன்ற படிப்புகளில் சேர இந்திய அளவில் நீட் என்னும் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. நடப்பு கல்வியாண்டிற்கான நீட் இளங்கலை தேர்வு வரும் (நாளை) ஜூலை 17ஆம் தேதி நடைபெற உள்ளநிலையில், நீட் தேர்வு நடத்தும் தேசிய தேர்வு முகமை தேர்வர்கள் பின்பற்றவேண்டிய விதிமுறைகளை மாணவர்களுக்கான ஹால் டிக்கெட்டில் வெளியிட்டுள்ளது.
அவையாவன,
*தேர்வு மையத்திற்கு மாணவர்கள் காலை 11.40 மணி முதல் மதியம் 1.30 மணி வரையில் அனுமதிக்கப்படுவார்கள். மதியம் 2 மணி முதல் 5 மணி வரையில் தேர்வு நடைபெறும்.
* மாணவர்கள் கரோனா பாதுகாப்பு விதிமுறைகளை படித்தேன் எனவும்; தனக்கு கடந்த 14 நாட்களாக இருமல், மூச்சு இரைப்பு, தொண்டை வலி, சளி, உடல்வலி போன்ற அறிகுறிகள் இல்லை என்பதற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.
* ஹால் டிக்கெட்டில் குறித்த நேரத்திற்கு ஒவ்வொரு மாணவரும், மாணவியும் தேர்வு மையத்திற்கு வந்து விடவேண்டும்.
* தேர்வு மையம் விவரத்தை ஒருநாள் முன்கூட்டியே மாணவர்கள் கண்டறிய வேண்டும்.
* மாணவர்கள் விண்ணப்பப்பதிவிற்கு பயன்படுத்திய பாஸ்போர்ட் அளவு அதே புகைப்படத்தை தேர்வு மையத்திற்கு கொண்டு வரவேண்டும். இந்த புகைப்படம் வருகைப்பதிவேட்டில் பயன்படுத்தப்படும்.
* மாணவர்கள் 50 மில்லி லிட்டர் சானிடைசரை உடன் எடுத்து வர வேண்டும்.
* முகக்கவசம் மற்றும் கை உறைகளையும் மாணவர்கள் அணிந்து வரவேண்டும்.
* மாணவர்கள் அரசால் வழங்கப்பட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டையைக் கொண்டு வரவேண்டும். அவை அசல் அடையாள அட்டையாக இருத்தல் வேண்டும்.
* பான் கார்டு , ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, 12ஆம் வகுப்பு தேர்வுக்கு வழங்கப்பட்ட ஹால்டிக்கெட், பாஸ்போர்ட், ஆதார், ரேஷன் கார்டு போன்றவற்றில் ஏதேனும் ஒரு அடையாள அட்டையை கொண்டு வரலாம்.
* தண்ணீர் பாட்டில் ஒன்றையும் மாணவர்கள் எடுத்து வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
* மொபைல் போன் உட்பட எந்த ஒரு எலக்ட்ரானிக் பொருட்களையும் மாணவர்கள் தேர்வு மையத்திற்கு எடுத்து வரக் கூடாது.
* தேர்வர்கள் ஆடை விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். முழுக்கை சட்டை போன்றவை அணிந்து வரத் தடை செய்யப்பட்டுள்ளது.
* தேர்வு முடிவதற்கு முன்பாக எந்தவொரு மாணவரும் வெளியே செல்ல அனுமதி இல்லை. மாணவர்கள் தேர்வு முடிந்த பின்னர் ஒரே நேரத்தில் செல்லக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி நாளை மதியம் 2 மணி முதல் 5 மணி வரை நீட் தேர்வு நடைபெறுகிறது. தேர்வர்களின் வசதிக்காக கூடுதலாக தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மாணவர்களை சமூக இடைவெளிவிட்டு அமர வைக்கும் வகையில் தேர்வு மையங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி, சேலம், சென்னை, திருநெல்வேலி, மதுரை, கோயம்புத்தூர், கரூர், திருவள்ளுர், பண்ருட்டி, கடலூர், நெய்வேலி, விருத்தாசலம், நாமக்கல், காஞ்சிபுரம், வேலூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, தஞ்சாவூர் ஆகிய நகரங்களில் நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: நீட் தேர்வு எழுதும் கிராமப்புற மாணவர்கள் விவரம் இல்லை: தேசிய தேர்வு முகமை