தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் தலைவர் என்.இராமசாமி என்கிற தேனாண்டாள் முரளி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் " 2009ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு அரசால் தேர்வு செய்யப்பட்டுள்ள நடிகர், நடிகையர், இயக்குநர்கள், ஏனைய தொழில் நுட்பக் கலைஞர்கள், மற்றும் சிறந்த திரைப்படங்களுக்கான விருதுகளையும், பரிசுத்தொகையினையும் வழங்கிட வேண்டும்.
2015 முதல் 2021ஆம் ஆண்டு வரையிலான விருதுகளுக்காக தேர்வு செய்திட குழு அமைத்திடவும், மேலும் சிறு முதலீட்டு படங்களில் தமிழ்நாடு அரசின் மானியத்திற்காக 2015, 2016, 2017 ஆகிய மூன்று ஆண்டுகளுக்காக விண்ணப்பித்துள்ள திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு மானியத்தொகையினை வழங்கி, அவர்களின் வாழ்வில் விளக்கேற்றிட வேண்டி தமிழ்நாடு முதலமைச்சரிடம் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் வேண்டுகோள் வைத்தோம்.
மக்கள் அனைவரையும் ஒரு சேர அரவணைத்துச்செல்லும் நம் முதலமைச்சர் முதல் கோரிக்கையை நிறைவேற்றி ஆணை பிறப்பித்துள்ளார். வாழும்போதே வரலாறாக வாழ்ந்துவரும் நம் முதலமைச்சர் நமது அடுத்தடுத்த கோரிக்கைகளையும் நிச்சயம் நிறைவேற்றித்தருவார் என்ற நம்பிக்கை திரை உலகினரிடம் நிறையவே உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சருக்கு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பிலும், ஒட்டுமொத்த தமிழ்த் திரை உலகம் சார்பிலும் இருகரம் குவித்து நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
இதற்கு உறுதுணையாக இருந்த செய்தித்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதனுக்கும், அலுவலர்களுக்கும் நன்றியைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். தமிழ்நாடு அரசின் விருது பெறும் அனைவருக்கும் வாழ்த்துகளும் பாராட்டுக்களும்" இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு அரசியலை சாக்கடையாக்கி அதிலே குதித்து மகிழ எண்ணுகிறார் அண்ணாமலை: முரசொலி காட்டம்