சென்னை: சென்னையின் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிந்துள்ள நிலையில் வார்டு உறுப்பினர்களின் பதவியேற்பு விழா நேற்று நடந்தது. இந்நிலையில் மேயர் பதவிக்கான வேட்பாளருக்கான வாக்கெடுப்பு நாளை நடைபெறுகிறது. திமுக சென்னை மாநகராட்சியின் 153 வார்டுகளில் வெற்றி அடைந்துள்ள நிலையில், சென்னையின் மேயர் பதவி வாக்கெடுப்பு குறித்து இன்று முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை மேயர் பதவி பட்டியலினப் பெண்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், சென்னையின் 340 ஆண்டு கால வரலாற்றில், இந்த ஆண்டு பட்டியலினப் பெண்களுக்கு மேயர் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒதுக்கீட்டில் சென்னையின் 74ஆவது வார்டு உறுப்பினரான திமுகவைச் சேர்ந்த பிரியா ராஜன் போட்டியிட உள்ளார். திமுக சார்பாகப் போட்டியிடும் பிரியா ராஜனுக்கு வாக்களிக்க திமுக கூறியுள்ளது.
சென்னையின் பெண் மேயர்கள்
சென்னையின் மேயராக 1957ஆம் ஆண்டு தாரா செரியன் முதல் பெண் மேயராகப் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் காமாட்சி ஜெயராமன் இரண்டாவது பெண் மேயராக 1971 முதல் 1972ஆம் ஆண்டு வரை மேயராக இருந்துள்ளார். தற்போது சென்னையின் மூன்றாவது பெண் மேயராகும் வாய்ப்பு பட்டியலின இளம்பெண் பிரியா ராஜனுக்கு கிடைக்க உள்ளது.
வடசென்னையின் திரு.வி.க. நகரின் 74ஆவது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட பிரியா ராஜன் வெற்றி பெற்றார். பிரியா ராஜன் எம்.காம் பட்டதாரி ஆவார். சென்னை வரலாற்றில் ரிப்பன் பில்டிங்கை அலங்கரிக்கப்போகும் பட்டியலினப் பெண் என்ற பெருமை பிரியா ராஜனைச் சேரும்.
மேலும் இவரது தாத்தா செங்கை சிவம் திமுக எம்எல்ஏ-வாக இருந்தவர். இந்நிலையில் செங்கை சிவத்தின் பேத்தியான பிரியாவுக்கு மேயர் பதவி கிடைப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:சென்னை மாநகராட்சி மேயராக பிரியா ராஜன் போட்டி!!!