தமிழ்நாட்டில் உள்ள சுயநிதி தொழிற் கல்லூரிகளுக்கான கட்டண நிர்ணயக்குழு தலைவராக உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி வெங்கட்ராமன் இருந்து வருகிறார்.
இந்தக் கட்டண நிர்ணய குழுவானது நிர்ணயம் செய்யும் கல்வி கட்டணம் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றம் செய்யப்பட்டு அறிவிக்கப்படும்.
அதன்படி, தனியார் தொழிற் கல்வி நிறுவனங்களில் 2020-21, 2021-22, 2022-23 ஆகிய கல்வியாண்டிற்கான புதிய கட்டணம் நிர்ணயம் செய்யப்பட உள்ளது.
பி.இ, பி.டெக், பி.ஆர்க், உள்ளிட்ட இளநிலை படிப்புகள், எம்.பி.ஏ, எம்.சி.ஏ, எம்.இ,.எம்.டெக், எம்.ஆர்க், ஒருங்கிணைந்த ஐந்து ஆண்டு முதுநிலை பட்டப்படிப்புகள் ஆகியவற்றிற்கான கட்டணத்தை உயர்த்துவதற்கு மே 30 ஆம் தேதிக்குள் கல்வி நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பப் படிவங்கள் மற்றும் வழிமுறைகளை ’www.tndte.gov.in’ என்ற இணையதளத்தில் பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, தனியார் கல்லூரிகள் சார்பில் காலநீடிப்பு வழங்க கோரிக்கை வைக்கப்பட்டதை ஏற்றுக்கொண்ட கட்டண நிர்ணய குழு, ஜூன் மாதம் 15 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவித்தது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள 400 பொறியியல் கல்லூரிகள், கல்வி கட்டணத்தை உயர்த்தி அளிக்க கட்டண நிர்ணய குழுவிடம் மனு அளித்துள்ளனர். இந்த மனுவை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
பொறியியல் கலந்தாய்வு வரும் செப்டம்பர் 10 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அதற்கு முன்பாக கல்வி கட்டண விபரத்தை கட்டண நிர்ணயக்குழு அறிவிக்க வேண்டும்.
கடந்த ஆண்டு அரசு ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணமாக பி.இ, பி.டெக் படிப்பிற்கு 50 ஆயிரமும், தேசிய தர அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் ரூ.55 ஆயிரமும், நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு ரூ.80 ஆயிரமும், தேசிய தர அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் ரூ.85 ஆயிரமும் வசூல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: "தோல்வியடைந்த மும்மொழித் திட்டத்தை செயல்படுத்த முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது'- பழநெடுமாறன்