சென்னை: தமிழ்நாடு சிறைகளில் கரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை பரவுவதைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி முதல் சிறைக் கைதிகளுக்கு உறவினர்களுடனான நேர்காணல் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டிருந்தது.
அதற்கு பதிலாக வழக்கமான தொலைபேசி அழைப்புகளுடன், சிறைகளுக்கு ஆண்ட்ராய்டு கைப்பேசிகள் வழங்கப்பட்டு, சிறைவாசிகள் அவர்களின் உறவினர்களுடன் வீடியோ கால் செய்யவும், e-Mulakat வசதியின் வாயிலாகக் காணொலி மூலம் நேர்காணல் செய்யவும் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல்...
இந்த நேர்க்காணலை மீண்டும் தொடங்கக்கோரி சிறைக் கைதிகளின் உறவினர்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டதையும், மாநிலத்தில் இயல்பு நிலை திரும்பி வருவதையும், சிறைக் கைதிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, கைதிகளின் உறவினர்கள், நண்பர்களுடனான நேரடி நேர்காணலை ஆக.16ஆம் தேதி முதல் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் மீண்டும் தொடங்கப்படுவதாக தமிழ்நாடு சிறைத்துறை டிஜிபி சுனில் குமார் சிங் அறிவித்துள்ளார்.
சிறைக்கைதிகளின் நேர்காணலின் போது பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைகள் குறித்த வழிமுறைகளை காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை தலைமை இயக்குநர் சுனில் குமார் சிங் அனைத்து சிறை கண்காணிப்பாளர்களுக்கும் வழங்கியுள்ளார்.
சிறைக்கைதிகளுக்கான விதிமுறைகள்
அதன்படி சிறைக் கைதிகளை நேர்காணல் செய்ய விரும்பும் பார்வையாளர்கள் அல்லது அந்தந்த சிறைகளின் தொலைபேசி மூலம் குறைந்தபட்சம் 24 மணி நேரத்திற்கு முன்பு பதிவு செய்ய வேண்டும். மேலும் சிறைக்கு 30 நிமிடங்களுக்கு முன்னதாக வருகை தர வேண்டும். ஒரு சிறை கைதியைக் காண அதிகபட்சமாக இரண்டு பார்வையாளர்கள் மட்டுமே நேர்காணலின்போது அனுமதிக்கப்படுவர். ஒரு சிறைக் கைதிக்கு 15 நாள்களுக்கு ஒரு முறை மட்டுமே நேர்காணல் அனுமதிக்கப்பட வேண்டும்.
சிறைக் கைதிகளை நேர்காணல் செய்ய விரும்பும் பார்வையாளர் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட சான்றிதழ் (அல்லது) 72 மணி நேரத்திற்குள் கொரோனா RT-PCR பரிசோதனை செய்து தொற்று இல்லை என அளிக்கப்பட்ட சான்றிதழ் இவற்றுள் ஏதேனும் ஒன்றைச் சமர்ப்பிக்க வேண்டும்.
சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாள்களைத் தவிர்த்து ஏனைய நாள்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நேர்காணல் 15 நிமிடங்கள் அனுமதிக்கப்படும். உடல் வெப்பநிலை சோதனை, கைகளை சுத்தம் செய்ததன் பிறகு பார்வையாளர்கள் முகக்கவசத்துடன் சிறையினுள் அனுமதிக்கப்படுவர்.
கரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்கும் பொருட்டு நேர்காணலின்போது பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள், நேர்காணல் மனுக்கள் ஆகியவற்றை சிறைத்துறை அதிகாரப்பூர்வ இணையதளத்திலும், இலவசமாக பார்வையாளர்கள் அறையின் நுழைவாயிலிலும் வழங்கப்படும்.
இதனை www.prisons.tn.gov.in என்ற இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து பெற்றுக் கொள்ளலாம் என்று சிறைத்துறை டிஜிபி சுனில் குமார் சிங் தெரிவித்துள்ளார்.