மக்களவைத் தேர்தலில் திமுக களமிறங்கும் 20 தொகுதிகளில் போட்டியிடப்போகும் அக்கட்சியின் வேட்பாளர் பட்டியலில் கனிமொழி, பொன்முடியின் மகன் கௌதம சிகாமணி, துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் உள்ளிட்ட ஏழு பேர் இடம்பெற்றிருந்தனர். இதனையடுத்து திமுக, வாரிசுகளுக்கே சீட் கொடுத்திருக்கிறது என்ற விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் இதனை திமுகவினர் மறுத்துவருகின்றனர்.
இந்நிலையில், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்திடம் இதுகுறித்து இன்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், “திமுகவில் வாரிசு வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். இது அந்தக் கட்சியின் விருப்பம். இதைப் பற்றிச் சொல்வதற்கு என்ன இருக்கிறது? மக்கள்தான் சொல்ல வேண்டும். மக்கள் என்ன முடிவு எடுக்கிறார்களோ அதுதான் இறுதித் தீர்ப்பு. மக்கள்தான் எஜமானர்கள்” என்றார்.