தமிழ்நாடு தொடக்கக் கல்வித்துறை இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள மாணவர் சேர்க்கை குறித்த கடிதத்தில், 2019-20ஆம் கல்வி ஆண்டிற்கு குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்ட மாணவர் சேர்க்கைக்கான நடைமுறையை பின்பற்றி மாணவர்களை சேர்க்க வேண்டும்.
பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை கோடை விடுமுறைக் காலத்திலேயே பள்ளி தலைமை ஆசிரியர்கள் செய்ய வேண்டும். அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள 2 ஆயிரத்து 381 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி, யூ.கே.ஜி. மாணவர் சேர்க்கை செய்ய வேண்டும். அங்கன்வாடியில் படிக்கும் குழந்தைகளில் ஐந்து வயதினை பூர்த்தி செய்த குழந்தைகளை கண்டறிந்து, அரசுப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பள்ளியில் மாணவர் சேர்க்கை சார்ந்த தகவலை பொது மக்கள் அனைவரும் அறியும் வகையில் பேனர்கள், துண்டுப்பிரசுரங்கள், விளம்பரப் பலகைகள் போன்றவற்றின் மூலம் தெரியப்படுத்த வேண்டும். இடையில் நின்ற மாணவர்களை கண்டுபிடித்து மீண்டும் பள்ளியில் சேர்க்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் தலைமையில் விழிப்புணர்வு கூட்டம் நடத்தி, அரசுப் பள்ளியில் தரமான கல்வி, மாணவர்களுக்கான காற்றோட்டமான சூழ்நிலையுடன் கூடிய வகுப்பறைகள், மதிய உணவுத்திட்டம், பாதுகாப்பான குடிநீர், கழிப்பிட வசதி, பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் ஆகியவை குறித்து பெற்றோர்கள் மத்தியில் விலக்கி மாணவர்களை பள்ளியில் சேர்க்க வேண்டும்.
கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு பேரணி நடத்தும்போது பள்ளி மாணவர்களை கட்டாயம் ஊர்வலத்தில் பங்குபெறச் செய்தல் கூடாது என அதில் கூறியுள்ளார். தமிழகத்தில் உள்ள அனைத்து வகையான அரசுப் பள்ளியிலும் மாணவர்கள் சேர்க்கையை ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நடத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் ராமேஸ்வரமுருகன் ஏற்கனவே அறிவித்திருந்தார். ஆனாலும், மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளியின் பெரும்பாலான தலைமை ஆசிரியர்கள் போதுமான அளவில் கவனம் செலுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.