திருப்பத்தூர் ஆரிஃப் நகரைச் சேர்ந்த இம்ரானின் மனைவி ஃபரீதாவுக்கு ஜனவரி 21ஆம் தேதி, திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த சில மணி நேரங்களில் ஃபரீதா உயிரிழந்ததால் உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
இது தொடர்பாக அன்றைய நாள் பணியிலிருந்த மருத்துவர்கள், செவிலியர், மருத்துவ உதவியாளர்களிடம் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் நடத்திய விசாரணையில், மருத்துவர்கள் யாரும் பணியில் இல்லாததால், அவர்களிடம் செல்போனில் ஆலோசனை பெற்று செவிலியர்களே பிரசவம் பார்த்தது தெரியவந்தது. இது குறித்து நாளிதழில் செய்தி வெளியானது.
அதேபோல் கடந்த வாரம் நாமக்கல் மாவட்டம் தோசூரைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை ரேவதி, நாமக்கல் அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்றெடுத்த நிலையில், ரத்தப்போக்கு ஏற்பட்டு உயிரிழந்தார். இதுதொடர்பாகவும் நாளிதழில் செய்தி வெளியானது.
இந்நிலையில், இந்த இரு நாளிதழ் செய்திகளின் அடிப்படையில், மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. இந்நிகழ்வுகள் தொடர்பாக, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர், நான்து வாரத்தில் தனித்தனியாக விரிவான அறிக்கை தாக்கல்செய்ய, மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் துரை. ஜெயச்சந்திரன் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: ஆபரேசன் 1... டிமிக்கி வாத்தியார் சஸ்பெண்ட், ஆபரேசன் 2... சத்துணவு சாப்பாடு: அதிரடி காட்டிய ஆட்சியர்