சென்னை: கரோனா தொற்றுப் பரவல் காரணமாக மூடப்பட்ட மழலையர் பள்ளிகள் இன்று (பிப்ரவரி 16) முதல் திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியிருந்தது. பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி பள்ளிகள் திறந்து செயல்படவும் அறிவுறுத்தியுள்ளது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள மழலையர் பள்ளிகள் இன்றுமுதல் செயல்படத் தொடங்கியுள்ளன.
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள லேடி வில்லிங்டன் பள்ளியில் எல்கேஜி, யுகேஜி மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கின. இதனை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார். மேலும், மாணவர்களுக்குச் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார்.
இனிப்புகள் வழங்கி வரவேற்பு
பள்ளிக்கு வந்த குழந்தைகளை ஆசிரியர்கள் இனிப்புகள் வழங்கி வரவேற்றனர். கரோனா தொற்று குறைந்த பின்னர், பள்ளிகள் திறக்கப்பட்டது தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக பெற்றோர்கள் தெரிவித்தனர். மேலும், தொடர்ந்து பாதுகாப்பு வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.
பள்ளியில் மாணவர்களுக்குத் தேவையான அனைத்துப் பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என லேடி விலிங்டன் பள்ளி தலைமையாசிரியை ஈஸ்வரி தெரிவித்தார்.
இதையும் படிங்க: திருப்புதல் தேர்வு மதிப்பெண்கள் கவனத்தில் கொள்ளப்பட மாட்டாது - தேர்வுத் துறை அலுவலர்