சென்னை: உலக நீரிழிவு நோய் நாளை முன்னிட்டு சென்னை மருத்துவக் கல்லூரி, அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி ஆகிய மருத்துவக் கல்லூரிகள் இணைந்து நடத்திய நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஆகியோர் நீரிழிவு குறித்த விழிப்புணர்வு கையேட்டினை வெளியிட்டனர்.
பின்னர் பேசிய மா. சுப்பிரமணியன், "நம் உடலில் உள்ள கணையத்திலிருந்து சுரக்கும் கணையநீர் அளவு குறைந்தாலோ, கணையநீர் செயல்பாட்டில் குறைபாடு ஏற்பட்டாலோ, ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகும் நிலைக்கு நீரிழிவு நோய் என்று பெயர்.
சர்க்கரை நோய் உலக அளவில் 10 முதல் 12 விழுக்காட்டினரைப் பாதித்துள்ளது. இந்தியாவில் மட்டும் 7.7 கோடி நீரிழிவு நோயாளிகள் உள்ளனர். தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 8 முதல் 10 விழுக்காடு வரை மக்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை நீரிழிவு நோய்க்கு பட்டயப்படிப்பு மட்டுமே இருந்துவருகிறது. நீரிழிவு நோய்க்குப் பட்டப்படிப்பு பயில்வதற்குத் தமிழ்நாடு முதலமைச்சர் ஆலோசனைப்படி, ஒன்றிய அரசின் அனுமதியைப் பெற்று விரைவிலேயே நீரிழிவு நோய்க்குப் பட்டப்படிப்பு பயில்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்தியாவிலேயே முதன்முறையாக நீரிழிவு நோய்க்கென்று தனித்துறை சென்னையிலுள்ள ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 1976ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2010ஆம் ஆண்டு உயர்நிலைத் துறையாக உயர்த்தப்பட்டது.
கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் டாக்டர் அம்பேத்கர் நீரிழிவு நோய்ப் பிரிவு 1983ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. நாள் ஒன்றுக்குக் கிட்டத்தட்ட 600 முதல் 700 வெளி நோயாளிகள் மருத்துவம் பெற்றுவருகின்றனர். ஸ்டான்லி மருத்துவக் கல்லூரிகளில் நீரிழிவு நோய்ப் பிரிவு 2005ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2016ஆம் ஆண்டு சிறப்புச் சிகிச்சை மையமாக அறிவிக்கப்பட்டது.
நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விலை உயர்ந்த மாத்திரைகளும் இலவசமாக வழங்கப்படுகின்றன. முதலாம் வகை நீரிழிவு நோயாளிகள் டைப்-1 நீரிழிவு மெல்லிட்டஸ் விலையில்லா இன்சுலின் மருந்து வழங்கும் திட்டம், இந்தியாவிலேயே முதன் முதலாக நம் மாநிலத்தில்தான் தொடங்கப்பட்டது.
உலக நீரிழிவு நோய் நாள் ஆண்டுதோறும் நவம்பர் 14ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பெருகிவரும் நீரிழிவு நோயைச் சமாளிக்க நீரிழிவு நோய் கல்வியும், விழிப்புணர்வும் தேவையென்று உலக நாடுகளுக்கு வலியுறுத்தப்படுகின்றன.
பன்னாட்டு நீரிழிவு கூட்டமைப்பு ஒவ்வொரு ஆண்டும் உலக நீரிழிவு நோய் நாளை முன்னிட்டு மக்களின் விழிப்புணர்வுக்காக ஒரு கருப்பொருள் வெளியிடுகிறது. இந்தாண்டு 2021-க்கான தலைப்பு நீரிழிவு மருத்துவத்திற்கான வசதி வாய்ப்புகள் ஆகும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சேதமடைந்த தளவானூர் தடுப்பணை; வெடி வைத்து தகர்ப்பு