தமிழர் திருநாளாம் தைப்பொங்கலையொட்டி அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில், தலா 2,500 ரூபாய் ரொக்கத்துடன், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர்ந்த திராட்சை, 5 கிராம் ஏலக்காய் மற்றும் ஒரு முழுநீள கரும்பு ஆகியவை அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை கடந்த 21 ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இதற்காக 5,604.84 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியும் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.
இதையடுத்து, தமிழகத்தில் உள்ள 2 கோடியே 10 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 2,500 ரூபாயுடன் பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கிட, கடந்த மாதம் வீடு வீடாக ரேஷன் கடை ஊழியர்கள் டோக்கன்களை விநியோகம் செய்தனர். அதில் பரிசுத்தொகையை பெற வேண்டிய நாள், நேரம் ஆகியவை குறிப்பிடப்பட்டிருந்தன.
இந்நிலையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு இன்று முதல் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது. காலை 8 மணிக்கு தொடங்கிய இதில், கூட்டத்தை தவிர்க்க ஒரு நாளைக்கு 200 பேர் வீதம் பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. வரும் 13 ஆம் தேதி வரை இந்த பொங்கல் பரிசு வழங்கப்படும் என்றும், விடுபட்டவர்கள் அதற்குப்பிறகும் ரேஷன் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: பொங்கல் பரிசுத் தொகை வாங்க காத்திருக்கும் பொதுமக்கள்!