”நான் எதிர்க்கட்சிகளை பார்த்து கேட்கிறேன். இங்கே கூடியிருக்கும் கூட்டம் ஏதோ, குவார்ட்டருக்கும், கோழி பிரியாணிக்கும் கூடிய கூட்டம் என்று நினைத்து விட்டீர்களா...?”
இப்படியான கரகரப்பு பேச்சுகளை அரசியல் கட்சிகளின் கூட்டங்களில் நாம் கேட்டுக்கொண்டிருக்கும் போதே, அவர் கூறிய மேற்படி வகையறாக்கள், கூட்டத்தில் கலந்துகொண்டோருக்கு விநியோகம் செய்யப்பட்டு கொண்டிருக்கும். கட்சியின் தலைவர் பிரச்சாரத்திற்கு வருகிறார் என்றால், மிகப்பெரிய அளவில் கூட்டத்தை கூட்டுவது அந்த வேட்பாளர் அல்லது மாவட்ட செயலாளரின் பொறுப்பு. அதற்காக கூட்டத்தினருக்கு தரப்படும் உறுதிமொழிதான் இந்த பிரியாணி. சில வேளைகளில் அது கிடைக்காமல், கட்சி கூட்டமே ரணகளமான கதைகளும் உண்டு. இப்படி, தேர்தல் காலத்திற்கும் பிரியாணிக்கும் அப்படி ஒரு பொருத்தப்பாடு இங்குண்டு.
இதனால் பிரியாணி கடைகளும் இக்காலங்களில் படு சுறுசுறுப்பாக இயங்குகின்றன. அரசியல் கட்சியினர் பிரியாணி கடைகளை அணுகி, பெரிய பெரிய ஆர்டர்கள் கொடுப்பதால், இதற்காகவே கூடுதலாக பிரியாணி மாஸ்டர்கள், பணியாள் போட்டு வேலை நடக்கிறது. பெரும்பாலும் வாக்குறுதிகளை அளித்து மக்களை ஈர்க்கும் அரசியல் கட்சியினரை, ’2 கிலோ பிரியாணி வாங்கினால் ஒரு கிலோ இலவசம்’ என பல சலுகைகளை அறிவித்து, பிரியாணி கடைகள் ஈர்ப்பதையும் இத்தேர்தல் நேரத்தில்தான் பார்க்க முடியும்.
இவ்வாறு தயார் செய்யப்பட்ட பிரியாணி பொட்டலங்கள், டோக்கன் மூலம், கூட்டங்களுக்கு அழைத்து வரப்பட்டவர்களுக்கு விநியோகிக்கப்படும். அல்லது டோக்கனை குறிப்பிட்ட பிரியாணி கடையில் கொடுத்தும் பெற்றுக் கொள்ளச் சொல்வதுண்டு.
கடந்த ஆண்டு கரோனா பொதுமுடக்கத்தால், கடைகள் மூடப்பட்டு வாழ்வாதாரமே முடங்கியிருந்த நிலையில், தற்போதைய தேர்தல் தங்களுக்கு மிகவும் பயனளிப்பதாகத் தெரிவிக்கின்றனர் பிரியாணி கடை உரிமையாளர்கள்.
மேலும், அரசியல் ஊர்வலத்தின் போது பிரியாணி கடை அண்டா திருடுபோனது, சாப்பிட்ட பிரியாணிக்கு காசு கொடுக்காமல் கடையை அடித்து உடைத்தது, ஓசியில் பிரியாணி தரவில்லை என்றதும், உள்துறை அமைச்சரிடம் சொல்லிவிடுவேன் என மிரட்டியது என, அரசியல் என்றாலே பிரியாணி என்றாகிவிட்டது.
இதையும் படிங்க: நீங்கள் வானதிக்கு வாக்களித்தால் 'சும்மா கிழி கிழி கிழி!' - கலா மாஸ்டர் கலகல...!