விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சகோதரி பானுமதி (65) கரோனா தொற்றுக்கு சிகிச்சை பலனின்றி நுங்கம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
அவரது மறைவை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவரான தொல்.திருமாவளவன் அவர்களின் மூத்த சகோதரி பானுமதி அம்மையார் கரோனா நோயினால் பாதிக்கப்பட்டு, மறைந்தார்கள் என்ற செய்தி கேட்டு தாங்க முடியாத அதிர்ச்சி அடைந்தேன்.
அவருடைய கண்ணீரில் நானும் பங்கேற்கிறேன். அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தோழர்களுக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கண்ணீர் அஞ்சலியைத் தெரிவித்துக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில், "விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் அண்ணன் முனைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் நேசத்திற்குரிய சகோதரி பானுமதி மறைந்த செய்தியறிந்து பெருந்துயருற்றேன். அண்ணன் திருமாவளவன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவஹருல்லா தனது ட்விட்டர் பக்கத்தில், "சகோதரர் திருமாவளவனின் சகோதரி பானுமதி மறைந்த செய்தி அறிந்து துயருற்றேன்.
திருமா அவர்களுக்கு உறுதுணையாக இருந்த அன்பு சகோதரியின் இறப்பு பேரிழப்பாகும். திருமா அவர்களுக்கும் குடும்பத்தார் அனைவருக்கும் மனிதநேய மக்கள் கட்சியின் ஆழ்ந்த இரங்கல்" என குறிப்பிட்டுள்ளார்.