சென்னை: தமிழில் எழுத்தாளர் இமையம் எழுதிய 'செல்லாத பணம்' நாவலுக்கு 2020ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்தாளர் இமையத்திற்கு பல அரசியல் கட்சித் தலைவர்களும், படைப்பாளிகளும் வாழ்த்து கூறி வருகின்றனர். ‘
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் எழுத்தாளர் இமையத்திற்கு வாழ்த்துக் கூறியுள்ளார். அதில், "தனது எழுத்துகளால் எளிய மக்களின் வாழ்வியலை அழகியலோடு வெளிப்படுத்தும் திராவிட இயக்கப் படைப்பாளர் இமையத்தின் 'செல்லாத பணம்' புதினத்திற்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்திருப்பது பெருமகிழ்ச்சி. கொள்கை சார்ந்த பயணத்துடனான படைப்புகள் மென்மேலும் விருதுகள் பெற்றிட வாழ்த்துகள்" எனப் பதிவிட்டுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், "இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது எழுத்தாளர் இமையத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. எளிய மக்களின் வாழ்வை அவர்களின் மொழியிலேயே படம் பிடித்துக் காட்டியவர். சமூகநீதிக்கான உரையாடல்களில் ஓங்கி ஒலிக்கும் குரல் அவருடையது. என் மனமார்ந்த வாழ்த்துக்கள்" என தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்தியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், "சாகித்ய அகாதெமி விருது பெறும் எழுத்தாளர் இமையம் அவர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பாராட்டுதல்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, மேலும் உழைக்கும் மக்களின் வாழ்வியலோடு இணைந்த சிறந்த பல படைப்புகளை தொடர்ந்து படைத்திடவும், பல்வேறு விருதுகளை பெறவும் வாழ்த்துகிறோம்" என எழுத்தாளர் இமையத்திற்கு வாழ்த்து மடலை வெளியிட்டுள்ளார்.
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் "எழுத்தாளர் அண்ணன் இமையத்தின் ‘செல்லாத பணம்’ நாவல் சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வாகியுள்ளது அறிந்து மகிழ்ந்தேன். பாசாங்கில்லாத எளிய மக்களின் மொழி - நெஞ்சம் கனக்கும் கதைக்கரு - சமூகத்தை ஊடுருவும் பார்வை கொண்டு எழுத்துலகில் சாதித்து வரும் அண்ணன் இமையத்துக்கு வாழ்த்துகள்" என்று எழுத்தாளர் இமையத்திற்கு வாழ்த்துக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: தமிழ் எழுத்தாளர் இமையத்திற்கு சாகித்ய அகாடமி விருது