நிலமோசடி தொடர்பாக, முன்னாள் டிஜிபியும் நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையுமான ரமேஷ் குடவாலா, தயாரிப்பாளர் அன்புவேல்ராஜன் ஆகியோருக்கு எதிரான புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, வழக்கு விசாரணையை சிபிசிஐடியிடம் மாற்றக் கோரி, நடிகர் சூரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ரவீந்திரன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இவ்வழக்கு குறித்து அடையாறு காவல்துறையினர் முறையாக விசாரித்து வருவதாகக் கூறி, விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தார்.
நடிகர் சூரி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நிலமோசடி தொடர்பாக முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலா பேசிய ஆடியோ பதிவு மற்றும் ஆதாரங்களை தாங்கள் வைத்திருப்பதாகக் கூறினார். அதை விசாரணை அதிகாரியிடம் ஒப்படைத்தால், அதுகுறித்தும் விசாரிக்க தயாராக இருப்பதாக காவல்துறை தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்த வழக்கு தொடர்பாக நடிகர் சூரியிடம் உள்ள ஆதாரங்களை அடையாறு காவல்துறையினரிடம் ஒப்படைத்து விசாரணைக்கு ஒத்துழைக்கக் கூறி, விசாரணையை 4 வாரத்திற்கு தள்ளிவைத்தார்.
இதையும் படிங்க: விதிப்படி கட்டப்படுகின்றனவா புதிய மருத்துவக் கல்லூரிகள்? - நீதிபதிகள் கேள்வி!