சென்னை: திமுகவில் 115ஆவது வட்ட செயலாளரான செந்தில்குமார், ஜாம்பஜார் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் சென்னை ஜாம்பஜார் ஆறுமுகப்பா தெருவில் முத்து மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது.
அந்தக் கோயில் அருகே இன்று (செப்.28) காலை பை ஒன்று இருந்தது. அந்தப் பையில் பழங்கால ஐம்பொன் சிலைகளான அம்மன் சிலை, கிருஷ்ணன் சிலை, அன்னபூரணி சிலை மற்றும் 2 அடி சங்கு ஆகியவை இருந்தன. இதனை கண்டு அதிர்ச்சியடைந்து ஜாம்பஜார் காவல் நிலையத்தில் உடனடியாக தகவல் கொடுத்ததாக புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து ஐம்பொன் சிலைகளை மீட்டு அறநிலைய துறை அலுவலர்களிடம் ஒப்படைத்தனர். அந்த சிலைகள் திருடப்பட்டதா..? பழங்கால சிலைகளா..? என ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த காவல் துறையினர் சிலைகளை கொண்டு வந்த நபர் யார்? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.