சென்னை: வடகிழக்குப் பருவமழையின் காரணமாக ஐந்து நாள்களாகப் பெய்துவரும் தொடர் மழையின் காரணமாக, சென்னையின் பெரும்பாலான குடியிருப்புப் பகுதிகள், தெருக்களில் மழைநீர் தேங்கியது.
இந்நிலையில் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், சென்னை ஆயுதப்படை காவல் அலுவலர்கள், ஆளிநர்கள் அடங்கிய 13 சென்னை பெருநகர காவல் மீட்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, 12 காவல் மாவட்டங்களிலும், சட்டம் ஒழுங்கு காவல் குழுவினர், மாநகராட்சி அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து மீட்பு, நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
மேலும், மழை நீர் சூழ்ந்துள்ள இடங்களில் வசிக்கும் பொதுமக்கள், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உணவுப் பொட்டலங்களும் வழங்கப்பட்டுவருவதாகச் சென்னை காவல் துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாகச் சென்னை வடக்கு மண்டலத்தில் ஏழுகிணறு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் உள்ள மாநகராட்சி சமுதாய நலக்கூடம், வண்ணாரப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் உள்ள கெனால் தெரு, சமுதாய நலக்கூடம், எம்.எம். காலனி பகுதியில் உள்ள எவர்வின் பள்ளி, கிழக்கு மண்டலத்தில் வேப்பேரி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட சென்னை மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, மேற்கு மண்டலத்தில் புளியந்தோப்பு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட அங்காளம்மன் கோயில் தெருவில் உள்ள சமுதாய நலக்கூடம்.
87 தற்காலிக முகாம்
கன்னிகாபுரம், தாஸ் நகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, தெற்கு மண்டலத்தில் சைதாப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளி, செம்மஞ்சேரி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பஞ்சாயத்து யூனியன் துவக்கப்பள்ளி, சேலையூர் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் உள்ள கார்லே மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட 87 தற்காலிக முகாம்களில் ஆயிரத்து 844 ஆண்கள், ஆயிரத்து 963 பெண்கள், 994 குழந்தைகள், ஒன்பது திருநங்கைகள் என மொத்தம் நான்காயிரத்து 810 நபர்கள் மீட்கப்பட்டு அவர்களுக்கு உணவுப் பொருள்கள் உள்ளிட்ட நிவாரணங்கள் வழங்கப்பட்டுத் தங்கவைக்கப்பட்டுள்ளதாகச் சென்னை காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.