லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள ஒரு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருள், எதிர்பாராதவகையில் கடந்த 5ஆம் தேதி வெடித்துச் சிதறியது. இதனால் அந்நகரமே உருக்குலைந்துள்ளது. இதையடுத்து நாடு முழுவதுமுள்ள துறைமுகங்கள் மற்றும் சேமிப்புக் கிடங்குகள் ஆகியவற்றில் உள்ள வெடிக்கும் தன்மை கொண்ட பொருள்கள் குறித்து ஆய்வறிக்கை அளிக்க மத்திய அரசு ஆணையிட்டுள்ளது.
சென்னை மணலியில் 740 டன் அமோனியம் நைட்ரேட் இருப்பது உறுதிசெய்யப்பட்டு, அக்கிடங்கை சுற்றி குடியிருப்புகள் இருப்பதால், அவற்றை விரைந்து அகற்ற மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து, அவற்றை மின்னணு ஏலம் மூலம் அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் சுங்கத்துறை இறங்கியுள்ளது.
இந்நிலையில், காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், சுங்கத்துறை இணை ஆணையர் பழனியாண்டி மற்றும் காவல் துறை அலுவலர்களின் ஆலோசனைக் கூட்டம், காவல் ஆணையரகத்தில் இன்று (ஆகஸ்ட் 08) காலை நடைபெற்றது. இதில், பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு கழகத்தின் அலுவலர்களும் கலந்துகொண்டனர். அப்போது, அமோனியம் நைட்ரேட்டை மின்னணு ஏலம் விடும் பணிகள் ஒரு பக்கம் நடந்தாலும், மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியில் அவற்றை வைத்திருப்பது ஆபத்து என வலியுறுத்தப்பட்டது.
மேலும், அவற்றை இரண்டு நாட்களுக்குள் பாதுகாப்பாக அப்புறுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. குடியிருப்புகள் அருகில் இல்லாத, ராணுவத்திற்குச் சொந்தமான வெடிபொருள் பாதுகாப்பு கிடங்குகளுக்கு அவற்றை தற்காலிகமாக மாற்றலாம் என்றும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சென்னையில் 740 மெட்ரிக் டன் அமோனியம் நைட்ரேட்; நகருக்கு ஆபத்தா?