கடந்த 11-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் படப்பை பகுதி மலைக்குறவ சமூகத்தைச்சேர்ந்த வேல்முருகன் என்பவர் தனது மகனுக்கு சாதிச்சான்றிதழ் வழங்கக்கோரி தீக்குளித்தார். அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் காவல் துறையினர் அனுமதித்தனர்.
சிகிச்சைப்பலனின்றி அவர் கடந்த 12ஆம் தேதி மரணமடைந்தார். இதனையடுத்து அவரது மனைவி சித்ரா மற்றும் குழந்தைகள் மற்றும் உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்து இரண்டு நாட்களாகப்போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் வேல்முருகனுக்கு இரண்டு திருமணங்கள் நடைபெற்றுள்ளன. முதல் மனைவி சேலம் பகுதியைச் சேர்ந்த வெண்ணிலா என்பதையும் காவல் துறையினர் கண்டுபிடித்து சட்டப்படி, வேல்முருகனின் உடலை முதல் மனைவியிடம் தான் ஒப்படைக்க முடியும் என்கிற அடிப்படையில் வெண்ணிலாவை வரவழைத்து இன்று(அக்.14) காலை 5 மணி அளவில் வேல்முருகன் உடலை அவரிடம் ஒப்படைத்தனர்.
மேலும் அவரது உடலை படப்பை அருகே உள்ள சொந்த ஊரில் வைத்து முதல் மனைவி வெண்ணிலா மற்றும் அவரது குழந்தைகளை வைத்து இறுதிச்சடங்கு செய்யப்பட்டு, நல்லடக்கம் செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட இரண்டாவது மனைவி சித்ரா மற்றும் உறவினர்கள் தற்போது மணிமங்கலம் பகுதிக்கு விரைந்து கொண்டிருக்கின்றனர்.
இதையும் படிங்க: மகள் கொலை... தந்தை தற்கொலை... தாய்க்கு புற்றுநோய் சிகிச்சை... உருக்குலைந்த குடும்பம்...