தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்துவருகிறது. சென்னை மீனம்பாக்கம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்தவருக்கு கடந்த மாதம் உடல் சோர்வு, மூச்சத் திணறல் போன்ற கரோனா அறிகுறி இருந்ததால் அவருக்கு குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது.
இதையடுத்து அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. இந்நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதையடுத்து துணை ஆய்வாளர் குருமூர்த்தியின் உடல் தாம்பரம் இடுகாட்டில், காவல் துறையினர் மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதையடுத்து சென்னை மீனம்பாக்கம் காவல் நிலைய வளாகத்தில் உதவி ஆய்வாளர் குருமூர்த்தியின் உருவப்படத்திற்கு சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் மற்றும் காவல் துறை தலைவர் திரிபாதி ஆகியோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.