சென்னை பூக்கடை மற்றும் யானைகவுனியில் பழக்கடை நடத்தி வரக்கூடிய வியாபாரி ஒருவர் லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார்.
அதில் உயர்நீதிமன்ற அனுமதியுடன் பூக்கடை மற்றும் யானைகவுனி ஆகிய இடங்களில் இரண்டு பழக்கடைகள் நடத்தி வருவதாகவும், எந்த ஒரு இடையூறு இல்லாமல் கடையை நடத்த வேண்டுமென்றால் பூக்கடை தலைமை காவலர் நாகராஜ் மற்றும் யானைகவுனி போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஜெயவேலு ஆகியோர் மாதம் 300, 500 ரூபாய் லஞ்சம் கேட்பதாக வியாபாரி புகாரில் தெரிவித்திருந்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பொறி வைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்நிலையில், இன்று தலைமை காவலர் நாகராஜ் மற்றும் போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஜெயவேலு ஆகியோர் பழக்கடை வியாபாரியிடம் லஞ்சம் பெறும்போது கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் இரு காவலரையும் கைது செய்த லஞ்ச ஒழிப்பு துறையினர் இதே போல் எத்தனை வியாபாரிகளிடம் லஞ்சம் பெற்றனர் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:11ஆம் வகுப்பு சேரணுமா? ரூ.5 ஆயிரம் கொடு: லஞ்சம் கேட்ட அரசு பள்ளி அலுவலர்கள்?