சென்னை: அரும்பாக்கத்தில் உள்ள பெட் நகைக்கடன் வங்கியில் கடந்த 13ஆம் தேதி 31.7 கிலோ தங்க நகைகள் கொள்ளை போன சம்பவத்தில், அதே வங்கியில் பணியாற்றிய ஊழியர் முருகனே தனது கூட்டாளியுடன் திட்டமிட்டு கொள்ளை இச்சம்பவத்தில் ஈடுபட்டது விசாராணையில் தெரியவந்தது.
இதனையடுத்து 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டு முக்கிய குற்றவாளிகளான முருகன், சூர்யா, சந்தோஷ், பாலாஜி, செந்தில்குமரன், நகை வியாபாரியான கோயம்புத்தூரைச் சேர்ந்த ஸ்ரீவத்சவா, அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் அமல்ராஜ் உள்ளிட்ட 7 பேரை போலீசார் கைது செய்தனர். கைதானவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட 31.7 கிலோ தங்க நகைகள் முழுவதுமாக மீட்கப்பட்டது. மேலும், இவர்கள் பயன்படுத்திய வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்த நிலையில் முக்கிய கொள்ளையன் முருகனின் பள்ளி பருவ நண்பன் வில்லிவாக்கத்தை சேர்ந்த கேப்ரியல் என்பவரை போலீசார் இன்று (ஆக. 22) கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட கேப்ரியல், முருகன் மற்றும் அவரது கூட்டாளிகள் இணைந்து வங்கியில் நகைகளை கொள்ளையடித்த பின்பு அவர்களுக்கு லாட்ஜ் எடுத்து கொடுத்து உதவி இருப்பதும், திருவண்ணாமலை வரை தப்பிச்செல்ல உதவியதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த உதவிக்காக முருகன் 3 சவரன் நகைகளை கேப்ரியலுக்கு வழங்கி இருப்பதும் தெரியவந்துள்ளது. இதனால், கொள்ளைக்கு உடந்தையாக இருந்ததாக கேப்ரியலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: அரும்பாக்கம் நகைக்கொள்ளையில் தீவிரமடையும் போலீஸாரின் விசாரணை