ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் பொதுமக்கள் ஆங்காங்கே கூட்டமாகக் கூடுவதும், தெருக்களில் கூட்டமாக அமர்ந்து பேசுவதும், இளைஞர்கள் விளையாடுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
பிரதான சாலைகளில் காவல் துறையினர் இரும்பு தடுப்புகள் அமைத்து வெளியே வரும் பொதுமக்களை திருப்பி அனுப்பி வருகின்றனர். எனினும் சிறிய தெருக்களில் இதுபோன்ற கூட்டம் கூடுவதைத் தடுப்பது காவல் துறையினருக்கு பெரும் சவாலாகவே உள்ளது.
இதனைக் கட்டுப்படுத்துவதற்காக 2 நாள்களுக்கு முன்பு சென்னை காவல் துறையினர், ட்ரோன் கேமராக்கள் மூலம் சிறிய தெருக்களில் கூட்டம் கூடுவதைக் கண்காணித்து, அந்தப் பகுதிகளில் நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர்.
இதனைத் தொடர்ந்து தற்போது ட்ரோன் ஒலிப்பெருக்கியைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர் . இதன்மூலம் ட்ரோனில் ஒலிப்பெருக்கியயை இணைத்து அதில் பொதுமக்கள் வெளியே வரக்கூடாது, ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள சூழலில் யாரும் கூட்டம் கூடக் கூடாது போன்ற அறிவிப்புகளைப் பதிவு செய்து அதை சிறிய தெருக்களில் பறக்கவிட்டு அறிவிப்பு செய்ய திட்டமிட்டுள்ளனர்.
இதன் முதற்கட்ட சோதனையாக திருவல்லிக்கேணி சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட் பகுதியில் நாளை இந்த ட்ரோன் ஒலிப்பெருக்கி பறக்க விடப்படவுள்ளது. அதன் சோதனை ஓட்டத்தை திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையர் தர்மராஜன், காவல் ஆய்வாளர் முருகேசன் ஆகியோர் இன்று பார்வையிட்டனர்.