கடலூர்: த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியான திரைப்படம் ஜெய்பீம். இப்படம் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியிலும் பெரும் வெற்றிபெற்றது. இந்நிலையில் இப்படத்தில் வன்னியர்கள் குறித்து தவறாக காட்டப்பட்டுள்ளதாக பாமகவினர் குற்றஞ்சாட்டினர். மேலும் சூர்யா மன்னிப்புக்கேட்க வேண்டும் என்றும் கூறிவந்தனர்.
கடலூர் பாமக மாணவர் சங்கம் மனு
இந்நிலையில் கடலூர் மாவட்ட திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்திடம் மாவட்ட பாமக மாணவர் அணியின் சார்பில், அக்கட்சியின் மாணவர் சங்க மாநிலச் செயலாளர் விஜயவர்மன் கொடுத்துள்ள மனுவில், "நடிகர் சூர்யா நடித்து வெளியான திரைப்படம் ஜெய்பீம். த.செ.ஞானவேல் இயக்கிய இப்படத்தை 2D Entertainment நிறுவனம் தயாரித்துள்ளது.
இது இருளர் சமுதாய மக்களின் வாழ்க்கையை மையமாக கொண்டுள்ள உண்மைச் சம்பவத்தை அடிப்படையில் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம். அதில் வழக்கறிஞர் சந்துரு என்ற கதாபாத்திரம் அதே உண்மைப்பெயரில் இருக்க, காவல் உதவி ஆய்வாளர் அந்தோணிசாமி என்ற தலித் கிறிஸ்தவர் பெயரை மட்டும் குருமூர்த்தி என்று மாற்றியும், அவரை வன்னியராக சித்தரித்தும் உள்ளனர்.
![பாமக அறிக்கை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-05-surya-pmk-script-7205221_07032022182252_0703f_1646657572_415.jpg)
சூர்யா படத்தை வெளியிடக்கூடாது
காவல் உதவி ஆய்வாளராக நடித்தவர் ஒரு சாதி வெறியர் போல சித்தரிக்கப்பட்டுள்ளது. வன்னியர்களின் அடையாளமான அக்கினி கலசத்தை அவர் வீட்டில் காட்சிப்படுத்தியுள்ளனர். ஒட்டு மொத்த வன்னிய சமுதாய மக்கள் சாதிவெறி வன்மம் உள்ளவர்கள் போல அப்படத்தில் காட்டியுள்ளனர்.
சகோதரத்துவமாக உள்ள இருளர், வன்னியர் சமுதாயத்தில் சாதி வன்மத்தைத் தூண்டும் விதமாக இத்திரைப்படம் எடுத்திருப்பது வன்னியர்களை கொச்சைப்படுத்தும் விதமாக உள்ளது. வன்னியர்களை வன்முறையாளர்களாகவும் தொடர்ந்து சித்தரித்து வரும் நடிகர் சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' திரைப்படத்தை, அவர் வன்னியர் மக்களிடம் பொது மன்னிப்பு கேட்காதவரை கடலூர் மாவட்டத்தில் ஒளிபரப்ப அனுமதிக்கக்கூடாது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ரிக்வெஸ்ட் அக்செப்டட்..! - ஏ.ஆர். ரஹ்மானுக்கு பச்சைக்கொடி காட்டிய ராஜா