இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இலங்கையில் என்ன நடக்கக்கூடாது என்று அஞ்சிக் கொண்டிருந்தோமோ, அது கடைசியாக நடந்தே விட்டது. தமிழ்நாட்டை ஒட்டியுள்ள மூன்று தீவுகளை சீனாவுக்கு எழுதிக் கொடுக்காத குறையாக தாரை வார்த்திருக்கிறது சிங்கள அரசு. அந்தத் தீவுகளை சீனா தளமாக மாற்றிக் கொண்டால், எந்த நிமிடமும் தமிழ்நாட்டின் மீது தாக்குதல் நடத்தும் அளவுக்கு இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
இலங்கைக்கும், தமிழ்நாட்டிற்கும் இடையில் உள்ள நெடுந்தீவு, அனலைத் தீவு, நயினாத் தீவு ஆகிய மூன்று தீவுகளில் காற்றாலை, சூரிய ஒளியை ஆதாரமாகக் கொண்டு மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை சீனாவைச் சேர்ந்த சினோசர் - இடெக்வின் (Sinosar-Etechwin) நிறுவனத்திற்கு இலங்கை அரசு வழங்கியுள்ளது. இத்திட்டம் ரூ.87.60 கோடி செலவில் செயல்படுத்தப்பட உள்ளது. மேலோட்டமாகப் பார்க்கும் போது இது ஒரு புதுப்பிக்கவல்ல எரிசக்தித் திட்டத்தைப் போன்று தோன்றும். ஆனால், இதன் நோக்கம் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவது தான்.
இலங்கையில் செயல்படுத்தப்படவுள்ள கலப்பு மின் திட்டத்தின் மதிப்பு வெறும் ரூ.87 கோடி மட்டும் தான். இந்தத் திட்டத்தைக் கைப்பற்றுவதற்காக இந்திய நிறுவனங்களும் போட்டியிட்டன. ஆனால், சீன நிறுவனம் தாக்கல் செய்த ஒப்பந்தப்புள்ளி தான் கவர்ச்சிகரமாக இருப்பதாகக் கூறி, அந்த நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தை வழங்கியுள்ளது இலங்கை அரசு. உண்மையில் இந்தத் திட்டம் என்பது இந்தியாவுக்கோ, சீனாவுக்கோ அல்லது அவற்றின் நிறுவனங்களுக்கோ சுண்டைக்காய்க்கு சமமானது ஆகும்.
ஆனாலும், இந்தத் திட்டத்திற்கான ஒப்பந்தத்தை சண்டையிட்டு சீனா கைப்பற்றியதற்கும், இந்த ஒப்பந்தம் தங்களுக்கு கிடைக்காததற்காக இலங்கை அரசிடம் இந்தியா கண்டனம் தெரிவித்ததற்கும் காரணம் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ள நிலப்பரப்பின் மீது ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற விருப்பம் தான் ஆகும். கலப்பு மின்திட்டம் செயல்படுத்தப்படவுள்ள நெடுந்தீவு, அனலைத் தீவு, நயினாத் தீவு ஆகிய தீவுகளில் மிகவும் பெரியது நெடுந்தீவு தான்.
இந்தத் தீவு தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்திலிருந்து 48 கிமீ தொலைவில் உள்ளது. இலங்கைக்கு இந்தியா தாரைவார்த்த கச்சத்தீவிலிருந்து இந்தத் தீவு வெறும் 23 கி.மீ தொலைவில் தான் உள்ளது. இந்தத் தீவுகளில் கலப்பு மின்திட்டத்தை செயல்படுத்தி அளவுக்கு அதிகமான மின்சாரத்தை உற்பத்தி செய்வதோ, கோடிக்கணக்கில் லாபம் ஈட்டுவதோ சாத்தியமல்ல. மாறாக, அந்த தீவுகளுக்கு தொழில்நுட்பப் பணியாளர்களை அழைத்துச் சென்று தங்க வைப்பதற்கு ஆகும் செலவுகள், அவர்களுக்கு அளிக்கும் ஊதியத்தையும் ஒப்பிட்டால், அதைவிட குறைவான செலவில், அதைவிட அதிகமான மின்சாரத்தை அமெரிக்காவிலிருந்து கூட கொண்டு வந்து விட முடியும். இவ்வளவையும் மீறி அந்தத் தீவுகளில் மின்னுற்பத்தித் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை சீனா பெற்றிருப்பதற்கு காரணம், அத்தீவுகளை இந்தியாவுக்கு எதிரான இராணுவத் தளமாக மாற்றிக்கொள்ளலாம் என்பது தான்.
நெடுந்தீவில் மின்திட்டங்களை செயல்படுத்தும் போர்வையில் இந்தியாவை 24 மணி நேரமும் கண்காணிக்க முடியும். ஆயுதங்களையும், இராணுவத் தளவாடங்களையும் கொண்டு வந்து சேமித்து வைத்துக் கொண்டால், இரு நாடுகளுக்கு இடையே போர் ஏற்பட்டால் உடனடியாக இந்தியாவைத் தாக்கி நிலைகுலைய வைக்க முடியும். இது சாதாரணமான ஆபத்து அல்ல. இந்த ஆபத்தின் தீவிரத்தை இந்தியா உடனடியாக உணர்ந்து, அதை முறியடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், இந்தியா, குறிப்பாக தமிழ்நாடு எந்த நேரமும் ஆபத்தின் விளிம்பில் தான் இருக்க வேண்டும். வடக்கில் லடாக் தொடங்கி வடகிழக்கில் சிக்கிம் மாநிலம் வரை இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயற்சி செய்து வரும் சீனா, இலங்கை தீவுகள் வழியாக தமிழ்நாட்டிலும் தொல்லை கொடுக்கத் தொடங்கும். அத்தகைய நிலை ஏற்பட்டால், இந்தியா வளர்ச்சியில் கவனம் செலுத்த முடியாமல் சீனாவை சமாளிப்பதிலேயே முழு கவனத்தையும் செலுத்த வேண்டிய நிலை ஏற்படலாம். அப்படி ஒரு நிலை ஏற்படுவதை இந்தியா இப்போதே தடுக்க வேண்டும்.
இலங்கைக்கு எவ்வளவு தான் உதவிகளைச் செய்தாலும் அது நமக்கு ஆதரவாக இருக்கப் போவதில்லை. கொழும்பு துறைமுகத்தில் கிழக்கு சரக்குப்பெட்டக முனையத் திட்டத்தை அமைப்பதற்காக இந்தியாவுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை சிங்கள அரசு ரத்து செய்திருப்பது தான் இதற்கு சான்று ஆகும். இப்போதும் இலங்கையில் தமிழர்கள் வலிமையுடன் இருப்பது தான் இந்தியாவின் பாதுகாப்புக்கு நல்லது. இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவை திரும்பப்பெறுவது, இலங்கையில் தமிழர்களின் கரங்களை வலுப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளின் மூலமாகத் தான் சீனாவின் அச்சுறுத்தலை முறியடிக்க முடியும். எனவே, அதற்கேற்ற வகையில் இலங்கை சார்ந்த தனது வெளியுறவுக் கொள்கையை இந்தியா மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும்; ஈழத்தமிழர்களை ஆதரிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க...வழக்கறிஞர் சங்கரசுப்பு மகன் சதீஷ்குமார் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!