சென்னை: பாமகவின் 20ஆவது பொது நிழல் நிதிநிலை அறிக்கையை நேற்று(மார்ச் 15) கட்சியின் நிறுவனர் எஸ். ராமதாஸ் வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், 'தமிழ்நாட்டில் மதுவிலக்கு என்பது பாமகவின் நீண்ட கால கோரிக்கையாகும். இந்த பொது நிழல் நிதிநிலை அறிக்கையிலும் அதனை திரும்ப வலியுறுத்தியுள்ளோம்.
- உழைப்பாளர் நாளான மே 1 முதல் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். அவ்வாறு இல்லையெனில் பாமகவினர் ஒன்று திரண்டு போராட்டக்களத்தில் குதிப்போம். எந்த ஒரு நல்ல திட்டத்துக்கோ அல்லது செயலுக்கோ நிதி இல்லை என்று சொல்வது தவறு. அனைத்து வகையான திட்டங்களும் சாத்தியமே. அரசின் வருவாயை பெருக்க நிறைய வளங்கள் இருக்கின்றன. இதற்காக ஏழை எளிய மக்களிடம் வரி வசூல் செய்ய தேவையில்லை' என தெரிவித்தார்.
நிழல் நிதி அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:
- 2022-23ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் வருவாய் வரவுகள் ரூ. 4 லட்சத்து,87ஆயிரத்து,460 கோடியாக இருக்கும். இது கடந்த ஆண்டின் வருவாய் வரவை விட ரூ. ஒரு லட்சத்து,94 ஆயிரத்து,670 கோடி அதிகமாக இருக்கும். கனிம வளங்களை சிறப்பான முறையில் கையாளுவதன் மூலம், வரி அல்லாத வருவாயாக ரூ. ஒரு லட்சத்து,78 ஆயிரத்து,470 கோடி ஈட்ட திட்டம் வகுத்திருப்பதால்தான் இந்த அளவுக்கு அதிக வருவாய் சாத்தியமாகிறது.
- நடப்பாண்டின் மொத்த செலவினம் ரூ. 5 லட்சத்து,05ஆயிரத்து,786 கோடியாகவும், வருவாய் செலவினம் ரூ. 4லட்சத்து,32 ஆயிரத்து,426 கோடியாகவும் இருக்கும். வருவாய் செலவினத்தில் ரூ. 50,000 கோடி நிலுவையில் உள்ள கடனை அடைப்பதற்காக அசலாக செலுத்தப்படும். இதன்படி, அடுத்த 10 ஆண்டுகளில் தமிழ்நாடு அரசின் தற்போதைய கடன் சுமை கட்டுக்குள் கொண்டுவரப்படும். வளர்ச்சித் திட்டங்களுக்காக புதிதாக வாங்கப்படும் கடன் மிக மிகக் குறைந்த அளவிலேயே இருக்கும்.
வேலைவாய்ப்பு பெருக்க சிறப்பாண்டு
- தமிழ்நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிக்கும் நோக்குடன் 2022-23ஆம் ஆண்டு வேலைவாய்ப்பு பெருக்க சிறப்பாண்டாக கடைபிடிக்கப்படும்.
- 2022-23ஆம் ஆண்டில் அரசுத் துறைகளில் 20,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். ஏற்கெனவே முடக்கி வைக்கப்பட்டுள்ள 80,000 காலியிடங்கள் நிரப்பப்படும். அதன் மூலம் நடப்பு ஆண்டில் ஒரு லட்சம் பேருக்கு அரசு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
- தனியார் நிறுவனங்களில் தமிழர்களுக்கு 80 விழுக்காடு இடஒதுக்கீடு
- தமிழ்நாட்டில் தொழில் திட்டங்களுக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்குவது கட்டாயம் ஆக்கப்படும்.
நகர்ப்புற வேலை உறுதித் திட்டம்
- நகர்ப்புறங்களில் வறுமையை ஒழிப்பதற்காக நகர்ப்புற ஏழைக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 100 நாள்கள் வேலை வழங்குவதற்கான நகர்ப்புற வேலை உறுதித் திட்டம் செயல்படுத்தப்படும்.
- ஆதரவற்றோர், மூத்த குடிமக்களுக்கு அவர்கள் விண்ணப்பிக்காமலேயே மாத உதவித் தொகை ரூ. 1,500 வழங்கப்படும். பயனாளிகளின் எண்ணிக்கை 20 லட்சமாக உயர்த்தப்படும்.
- வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ. 5,000 உதவித் தொகை
மது விலக்கு
- தமிழ்நாட்டில் உழைப்பாளர் நாளான மே 1 முதல் முழுமையான மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும்.
வலிமையான லோக் ஆயுக்தா
- தமிழ்நாட்டில் தற்போது முடக்கப்பட்டிருக்கும் லோக் ஆயுக்தாவிற்கு புத்துயிரூட்டப்படுவதுடன், கூடுதல் அதிகாரங்களும் வழங்கப்படும்.
- முதலமைச்சர், அமைச்சர்கள், அரசுத் துறை உயர் அலுவலர்கள் லோக் ஆயுக்தாவின் அதிகார வரம்பிற்குகீழ் கொண்டுவரப்படுவார்கள்.
மின் கட்டணம் குறைப்பு
- தமிழ்நாட்டில் இரு மாதங்களுக்கு ஒரு முறை மின்கட்டணம் செலுத்தும் முறை மாற்றப்பட்டு, மாதம் ஒருமுறை மின்கட்டணம் செலுத்தும் முறை அறிமுகம் செய்யப்படும். இதனால் மின்கட்டணம் மேலும் 56 விழுக்காடு குறையும்.
புதிய மின் திட்டங்கள்
- அடுத்த ஐந்து ஆண்டுகளில் 17,340 மெகாவாட் அனல்மின் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
- அடுத்த ஐந்து ஆண்டுகளில் 5 ஆயிரம் மெகாவாட் சூரியஒளி மின்திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
- மின்வாரியத்தை லாபத்தில் இயக்க சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.
இதையும் படிங்க: 'மத்திய அரசு மீது சட்டப்பேரவை தலைவர் அப்பாவு குற்றச்சாட்டு'