சீனாவிலிருந்து மருத்துவக் கழிவுகளை ஏற்றிக்கொண்டு கப்பல் ஒன்று சென்னை துறைமுகத்துக்கு வந்துள்ளதாகத் தெரிகிறது. இந்தக் கப்பலை அனுமதிக்கலாமா வேண்டாமா என்றும் அனுமதித்தால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பது குறித்தும் சென்னை துறைமுக பொறுப்பு கழக உயர்மட்டக் குழு அலுவலர்கள் ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மருத்துவக் கழிவுகளுடன் சென்னை கடலுக்கு வந்துள்ள சீனக் கப்பலை துறைமுகத்துக்குள் அனுமதிக்கக்கூடாது என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும், மருத்துவக் கழிவுகளை இறக்க அனுமதிப்பது மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்றும் உடனடியாக சீன மருத்துவக் கழிவு கப்பலை சென்னை கடல் பகுதியிலிருந்து வெளியேற்ற மத்திய அரசு ஆணையிட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
சீனாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழ்நாட்டிலும் ஏற்படக்கூடும் என்ற அச்சத்தில் மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் நிலையில், சென்னை அருகே சீனக் கப்பல் ஒதுங்கியுள்ள விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சீனாவை அச்சுறுத்திவரும் கொரோனா: மருந்து தயார்... இந்தியாவிலிருந்து கிளம்பும் போதி தர்மர்!