இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாட்டிலுள்ள முக்கியத் தொடர்வண்டி நிலையங்களை நவீனமயமாக்கவும், பயணிகளுக்கு கூடுதல் வசதிகளை ஏற்படுத்தித் தர முடிவு செய்துள்ள தொடர்வண்டி வாரியம், அதற்காகப் பயணிகளிடம் கூடுதலாக பயனாளர் கட்டணத்தை வசூலிக்க முடிவு செய்திருப்பதாக வாரியத்தின் முதன்மை செயல் அலுவலர் வி.கே.யாதவ் கூறியிருக்கிறார். அத்தகைய வசதிகளை தனியார் நிறுவனங்கள் அவற்றின் முதலீட்டில் ஏற்படுத்திக் கொடுத்தால், அந்த முதலீட்டை திருப்பி எடுப்பதற்காக தொடர்வண்டி நிலையத்தில் உள்ள இடங்களை வணிகரீதியாக பயன்படுத்திக் கொள்ள அனுமதிப்பதுதான் இயல்பாகும். அதை விடுத்து தனியார் நிறுவனங்கள் லாபம் ஈட்டுவதற்காக பயணிகளிடம் பயனாளர் கட்டணம் வசூலிப்பது எந்த வகையில் நியாயமாகும்?
இதில் இன்னொரு அநீதியும் உள்ளது. நாட்டில் உள்ள 7,000 தொடர்வண்டி நிலையங்களில் 700 முதல் 1,050 தொடர்வண்டி நிலையங்கள் நவீனப்படுத்தப்படுமாம். எவ்வளவு காலத்திற்குள் அவை நவீனமயமாக்கப்படும் என்பது யாருக்கும் தெரியாதாம். ஆனால், எந்த வசதியும் ஏற்படுத்தப்படாத நிலையிலேயே, அடுத்த சில வாரங்களில் இருந்தே, அந்தத் தொடர்வண்டி நிலையங்களில், இல்லாத சேவைகளுக்கு, பயனாளர் கட்டணம் வசூலிக்கப்படுமாம். இது நியாயமா?
தொடர்வண்டி சேவை என்பது ஏழைகளுக்கானது. அந்த சேவையில் பயனாளர் கட்டணம் என்ற பெயரில் கட்டணம் வசூலிக்கப்பட்டு, மறைமுகக் கட்டண உயர்வை நடைமுறைப்படுத்தினால், தொடர்வண்டி சேவை என்பது ஏழைகள், நடுத்தர மக்களுக்கு எட்டாக்கனியாகிவிடும்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ’ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் ராமன்-லட்சுமணன் போன்றவர்கள்' - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்