இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் கரோனா பரவலைத் தடுப்பதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் சில பாதிப்புகள் ஏற்பட்டிருந்தாலும், பல நன்மைகளும் விளைந்துள்ளன.
அவற்றில் முதன்மையானது மதுவை மக்கள் மறந்திருப்பதுதான். ஊரடங்கு காரணமாக மதுக்கடைகள் மூடப்பட்டு இதுவரை ஐந்து வாரங்களுக்கு மேலாகும் நிலையில், மது கிடைக்காததால் எவரும் பாதிக்கப்பட்டதாகத் தகவல் இல்லை.
மதுவுக்கு அடிமையாகி, அது இல்லாவிட்டால் வாழவே முடியாது என்று வர்ணிக்கப்பட்டவர்கள்கூட, இப்போது மதுவை மறந்து புதிய மகிழ்ச்சியுடன் வாழ்ந்துவருகின்றனர். ஒரு சிலர் மதுவிலிருந்து மீள முடியாமல் மன அழுத்தத்திற்கு ஆளானது உண்மைதான் என்றாலும், உடற்பயிற்சி, யோகா ஆகியவற்றின் மூலம் மீண்டுவந்து, இப்போது புதிய உற்சாகத்துடன் எந்தப் பணியையும் செய்ய முடிவதாகத் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டின் மனிதவளம் அதன் முழுத்திறனையும் வெளிப்படுத்தினால், ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு குறைந்தபட்சம் 20 விழுக்காடு உயரும். அரசின் நிதிநிலை அறிக்கை மதிப்பீட்டின்படி, 2020 & 21ஆம் நிதியாண்டில் மாநிலத்தின் ஒட்டுமொத்த மாநில உற்பத்தி மதிப்பு 20 லட்சத்து 91 ஆயிரத்து 896 கோடி ஆகும்.
மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட்டு, மனிதவளம் முழுமையாகப் பயன்படுத்தப்பட்டால், தமிழ்நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பு நான்கு லட்சத்து 18 ஆயிரத்து 379 கோடி அதிகரிக்கும். இதிலிருந்து கிடைக்கும் வருவாய், மது வணிகத்தால் கிடைக்கும் வருவாயைவிட அதிகமாக இருக்கும்.
அதுமட்டுமின்றி பொருளாதாரம் தழைக்கும்; வேலைவாய்ப்பு பெருகும்; வறுமை விலகும்; குடும்பங்களில் மகிழ்ச்சி தண்டவமாடும். எனவே, தமிழ்நாட்டில் ஊரடங்கு ஆணை விலக்கிக் கொள்ளப்படும் நாளிலிருந்து, முழுமையான மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்ற அறிவிப்பை அரசு வெளியிட வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: சட்டவிரோத மது விற்பனை: தடுத்து நிறுத்தக்கோரி புகார்!