இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியாவில் பல குடும்பங்கள் இரு வேளையாவது பசியாறுவதற்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் தான் காரணமாகும். அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்பு சாராத வேலைவாய்ப்பு சந்தை புத்துயிர் பெறுவதற்கு இன்னும் பல வாரங்கள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், பல லட்சம் மக்களின் வாழ்வாதாரம், இத்திட்டமாகவே இருக்கும். இத்திட்டத்தின்படி சராசரியாக ஒரு குடும்பத்திற்கு மாதம் 6 நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்படுகிறது.
தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், வறுமை ஒழிப்பு திட்டம் மட்டுமல்ல. கிராமப்புற பொருளாதாரத்திற்கு புத்துயிரூட்டி, இந்திய பொருளாதாரத்தை வளர்ச்சி அடையச் செய்ய வைக்கும் திட்டமாகும். இத்திட்டத்திற்காக செலவிடப்படும் தொகை உடனடியாக நுகர்வோர் சந்தைக்குச் சென்று பணப்புழக்கத்தை அதிகரிக்கச் செய்யும். ஆகவே, இத்திட்டத்திற்கு எவ்வளவு அதிகமாக நிதி ஒதுக்கப்படுகிறதோ, அவ்வளவு அதிகமாக இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சியடையும் வாய்ப்புள்ளது.
தேசிய ஊரக வேலை திட்டத்திற்கு நிதிநிலை அறிக்கையில், ரூ. 61 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், கடந்த வாரம் கூடுதலாக ரூ. 40,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அத்துடன் கூடுதலாக ரூ. 40,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டால், இத்திட்டத்தின் கீழ் வேலை வழங்கப்படும் நாட்களின் எண்ணிக்கையை 200ஆக உயர்த்த முடியும். அதன் மூலம் வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் மக்களுக்கு, வேலை வழங்க முடியும். அது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் வழி வகுக்கும். எனவே, தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலை வழங்கப்படும் நாட்களின் எண்ணிக்கையை 200 நாட்களாக மத்திய அரசு உயர்த்த வேண்டும். இக்கோரிக்கையை தமிழ்நாடு அரசும் வலியுறுத்த வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: தமிழ் தொழிலாளர்களுக்கு உணவு அளித்த ஆந்திர டிஜிபி - குவியும் பாராட்டு!