சென்னை: சென்னை பெட்ரோலிய நிறுவனம் சி.பி.சி.எல் மற்றும் இந்தியன் ஆயில் நிறுவனம் இணைந்து கூட்டுத் திட்டமாக நாகை மாவட்டம் காவிரி ஆற்றுப் பகுதியில், 31,500 கோடி ரூபாய் மதிப்பிலான பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலையை அமைக்கிறது. இதற்குப் பிரதமர் நரேந்திர மோடி வரும் 17ஆம் தேதி காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டுகிறார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் பன்வரிலால் புரோஹித், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கலந்து கொள்வார்கள்.
இது குறித்து சென்னையில் உள்ள தனியார் விடுதியில் செய்தியாளர்களைச் சந்தித்த சி.பி.சி.எல். நிர்வாக இயக்குநர் ராஜீவ் அய்லவாடி, "இந்த ஆலை, ஆண்டுதோறும் 9 மில்லியன் டன் பெட்ரோலியப் பொருட்களை சுத்திகரிக்கும் திறன் கொண்டது. இதற்கான 50 விழுக்காடு நிதியை சிபிசிஎல் நிறுவனமும், இந்தியன் ஆயில் நிறுவனமும் முதலீடு செய்யும், மீதமுள்ள தொகையை முதலீட்டாளர்கள் மூலம் பெறப்படும். இத்திட்டத்துக்கு தமிழ்நாடு அரசு நிதி உதவி செய்ய முன் வந்துள்ளது.
சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் நவீன தொழில்நுட்பம் மூலம் இங்கு பெட்ரோலியம் சுத்திகரிக்கப்படும். இதற்காக பொதுமக்களிடம் கருத்து கேட்பு நிறைவடைந்து, சுற்றுச்சூழல் சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது. இதில் எந்த சூழல் பிரச்னையும் இல்லை. ஏற்கெனவே இந்த இடத்தில் 600 ஏக்கரில் சுத்திகரிப்பு ஆலை செயல்பட்டு வந்தது, அதே இடத்தில் புதிய ஆலை அமையும். சுற்றியுள்ள இடங்களில் பசுமை சுற்றுசூழலை ஏற்படுத்த கூடுதலாக 650 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணி இறுதிக்கட்டத்தில் உள்ளது" என்றார்.
இது தொடர்பாக சிபிசிஎல் தொழில்நுட்பப் பிரிவு இயக்குர் சங்கர் பேசுகையில், "நாகையில் அமையவுள்ள உற்பத்தி செய்யும் பெட்ரலியப் பொருட்கள், குழாய் மூலமாக தென்னிந்தியா முழுவதும் கொண்டு செல்லப்படும். மேலும், இங்கிருந்து காரைக்கால் துறைமுகம் வாயிலாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். இந்த ஆலைக்கான தொழில்நுட்பங்கள் உள்நாட்டிலேயே உருவாக்கப்படுகிறது.
இந்தத் திட்டம் மூலம் 12 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாப்பு கிடைக்கும், மேலும் இதற்கு தொடர்புடைய சிறு, குறு நிறுவனங்களில் 5 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். தற்போது தமிழ்நாட்டில் பின்தங்கியப் பகுதியாக உள்ள நாகை மாவட்டம் இந்த திட்டம் மூலம் வளர்ச்சி பெறும்" என்றார்.
சூழலுக்கு உகந்த எரிவாயு மணலியில் 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில், எரிவாயுவில் இருந்து சல்பரின் அளவைக் குறைக்கும் ஆலை அமைக்கப்பட்டுள்ளது. இதனை பிதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து நாட்டுக்கு அர்பணிக்கிறார். இதன்மூலம் சூழல் மாசுபாடு குறையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிவாயு குழாய் தொடக்கம்
எண்ணூரிலிந்து திருவள்ளூரு - பெங்களூரு - புதுச்சேரி - நாகை - மதுரை வழியாக தூத்துக்குடிக்கு குழாய் மூலம் எரிவாயு கொண்டு செல்லும் திட்டத்தின் ஒரு பகுதியாக ராமநாதபுரம் முதல் தூத்துக்குடி வரை 143 கிலோமீட்டர் தொலையில், சுமார் 700 கோடி ரூபாய் செலவில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள எரிவாயு குழாயை பிரதமர் திறந்து வைக்கிறார். இதன்மூலம் ஓஎன்ஜிசி குழாய்கள் மூலம் தூத்துக்குடி ஸ்பிக் தொழிற்சாலைக்கு இயற்கை எரிவாயு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: புதிய தொழில் கொள்கை: நாளை வெளியிடும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி!