கரோனா ஊரடங்கு அறிவிப்பால் மார்ச் 24ஆம் தேதி நடந்த பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை, மாநிலத்தின் பல பகுதிகளில் உள்ள மாணவர்கள் சிலர் எழுத முடியாமல் போனது. அதனைத்தொடர்ந்து தேர்வில் பங்கேற்க முடியாத மாணவர்களுக்கு மறு தேர்வு நடத்தப்படும் என அரசு அறிவித்தது.
அதனடிப்படையில், பன்னிரெண்டாம் வகுப்பு மறு தேர்வு நேற்று (ஜூலை 27) நடைபெற்றது. இதற்காக 289 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, தேர்வு மையத்திற்கு ஐந்து ஆசிரியர்கள் பணி அமர்த்தப்பட்டனர். மறு தேர்வு எழுத 175 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், அவர்களில் 147 மாணவர்கள் எழுதியுள்ளனர். அதேபோல் தனித்தேர்வர்களாக 673 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். அவர்களில் 372 பேர் தேர்வெழுதியுள்ளனர்.
இதையடுத்து, மாணவர்களுடைய விடைத்தாள்களை மாவட்ட அளவிலேயே இன்று திருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அவர்களின் மதிப்பெண்கள் உடனடியாக தேர்வுத்துறைக்கு அனுப்பப்பட்டு, தேர்வு முடிவுகள் நாளையே வெளியிடப்படும் என அரசு தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சுமார் 30 ஆயிரம் மாணவர்கள் எழுத வேண்டிய இத்தேர்வை 519 பேர் மட்டுமே எழுதியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: காவலர் காலிப் பணியிடங்கள்...! தேர்ச்சி பெற்ற மாணவர்கள் கோரிக்கை