திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு ஏரி முகத்துவாரத்தை தூர்வாரக்கோரி, ஆண்டிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த மீனவர் உஷா என்பவர் தொடர்ந்த வழக்கு, நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சுரேஷ்குமார் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞர் போத்திராஜ், பழவேற்காடு ஏரி முகத்துவாரத்தில் தேங்கியிருந்த மணல், ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் தற்காலிகமாக அகற்றப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.
அப்பகுதியில் மணல் சேராமல் தடுக்க 27 கோடி ரூபாய் செலவில் நிரந்தர தடுப்புச்சுவர் அமைப்பதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, மாநிலக் கடலோர ஒழுங்குமுறை ஆணைய அனுமதியும், சுற்றுச்சூழல் பாதிப்பு தொடர்பான அனுமதியும் பெறப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
மேலும், இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு அனுமதிகோரி மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு விண்ணப்பித்திருப்பதாகவும் தெரிவித்தார்.
இதைப் பதிவுசெய்த நீதிபதிகள், திட்டத்திற்காகப் பெறப்பட்ட அனுமதிகளையும், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தில் நிலுவையில் உள்ள அனுமதி கோரிய விண்ணப்பத்தின் தற்போதைய நிலை குறித்தும் ஆறு வாரங்களில் அறிக்கை தாக்கல்செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு வழக்கைத் தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க: பட்டினப்பாக்கம் - பெசன்ட் நகர் இணைப்பு சாலை - திட்ட அறிக்கை தாக்கல் செய்ய ஆணை