சென்னை: தொடக்கக் கல்வித் துறையில் காலியாக உள்ள வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களை நேரடியாக நிரப்புவதற்கான அறிவிப்பை 2018-19ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. 2018-19ஆம் ஆண்டு காலிப்பணியிடங்கள் 97 நிரப்புவதற்கு போட்டி எழுத்துத்தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது.
அதன் அடிப்படையில் இந்தப் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க இந்த 42 ஆயிரத்து 686 தேர்வர்களுக்கு 2020 பிப்ரவரி 14ஆம் தேதிமுதல் 16ஆம் தேதிவரை ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வின் தற்காலிக விடை குறிப்புகள் 2020 பிப்ரவரி 26ஆம் தேதி ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டது. 2021 ஜனவரி 27ஆம் தேதி வட்டார கல்வி அலுவலர் பணிக்கான இறுதி விடைகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டன.
இந்தத் தேர்வில் தவறாகக் கேட்கப்பட்ட வினாவுக்கு அனைத்து மாணவர்களுக்கும் மதிப்பெண் வழங்கப்பட்டது. அதனடிப்படையில் தகுதிபெற்ற தேர்வர்களின் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் தொடக்கக் கல்வித் துறையில் மேலும் 23 வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிசம்பர் 28ஆம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் கூடுதலாக வெளியிட்டது. மேலும் ஏற்கனவே நடத்தப்பட்ட தேர்விலிருந்து 120 வட்டார கல்வி அலுவலர் பணியிடங்கள் நிரப்பப்படும் எனவும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் லதா வெளியிட்டுள்ள அறிவிப்பில், வட்டார கல்வி அலுவலர் பணியிடத்திற்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் சான்றிதழ் சரிபார்ப்பு பதிவுசெய்த ஆவணங்களின் அடிப்படையில் சரிபார்க்கப்பட்டு ஜனவரி 10ஆம் தேதி வெளியிடப்பட்டது.
ஆன்லைன் மூலம் சான்றிதழைச் சரிபார்க்கப்பட்டவர்களின் தகுதிப் பட்டியல் ஜனவரி 12ஆம் தேதி தயாரிக்கப்பட உள்ளது. ஒரு பணியிடத்திற்கு இரண்டு நபர்கள் என அழைக்கப்பட்டு ஜனவரி 19, 20 ஆகிய தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும்.
வட்டார கல்வி அலுவலர் பணியிடத்திற்குத் தேர்வுசெய்யப்பட்டவர்களின் இறுதிப் பட்டியல் ஜனவரி 20ஆம் தேதி உறுதிசெய்யப்படும். தகுதிபெற்றவர்களின் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் ஜனவரி 21ஆம் தேதி பதிவேற்றம் செய்யப்படும் எனவும் பள்ளிக் கல்வித் துறையிடம் ஜனவரி 24ஆம் தேதி வட்டார கல்வி அலுவலர் பணியிடத்திற்குத் தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.