தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் கணினி முதுகலை ஆசிரியர்கள் 814 பேரை தேர்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் மார்ச் 20ஆம் தேதி முதல் ஏப்ரல் 10ஆம் தேதி வரையில் இணையதளம் மூலம் பெறப்பட்டது. இதற்காக 30,833 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இந்நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில், ‘2018-2019ஆம் ஆண்டு கணினி பயிற்றுநர் (நிலை-1) (முதுகலை ஆசிரியர் நிலை) நேரடி நியமனத்திற்கான அறிவிப்பு ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் மார்ச் 1ஆம் தேதியன்று வெளியிடப்பட்டது. இணையவழித் தேர்வு (ஆன்லைன்) ஜூன் 23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று ஒதுக்கப்பட்டுள்ள 119 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது.
இந்தத் தேர்வினை எழுதுவதற்கு 7,546 ஆண்களும், 23,287 பெண்களும், 322 மாற்றுத்திறனாளிகளும் என 31,155 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.
தேர்வு விதிமுறைகளைத் தேர்வர்கள் பின்பற்ற வேண்டும். அதாவது, தேர்வர்கள் அனுமதிச் சீட்டினை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து எடுத்து வருதல் வேண்டும். மாற்றுத்திறனாளி தேர்வர்கள் தம்முடைய மாற்றுத்திறனாளி சான்றிதழையும் உடன் எடுத்து வருதல் வேண்டும்.
தேர்வர்கள் கட்டாயம் அனுமதிச் சீட்டினை தேர்வு அறைக்கு கொண்டு வர வேண்டும். அனுமதிச் சீட்டு இல்லாத தேர்வர்களுக்கு நுழைவு மறுக்கப்படும்.
நுழைவுச்சீட்டில் அச்சிடப்பட்டுள்ள புகைப்படமும், தேர்வர் ஒட்டியுள்ள புகைப்படமும் ஒன்றாக இருந்தால் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். மேலும், தேர்வர்கள் புகைப்பட அடையாளமாக வாக்காளர் அடையாள அட்டை, கடவுச்சீட்டு, நிரந்தர கணக்கு எண், ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றினை எடுத்து வர வேண்டும்.
தேர்வர்கள் தடைசெய்யப்பட்ட பொருட்களையோ அல்லது விலை உயர்ந்த பொருட்களையோ தேர்வு மையத்திற்கு எடுத்து வருதல் கூடாது. அத்தகைய பொருட்களுக்கு தேர்வு மையம் பொறுப்பாகாது. ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அளிக்கப்பட்ட தேர்வர்களுக்கான முக்கியக் குறிப்புகளை பின்பற்றாமல் செயல்படுபவர்கள் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்படுவதுடன் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என அதில் கூறப்பட்டுள்ளது.