பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சுங்கக் கட்டணம் உயர்வு, கிரீன் டேக்ஸ், பிஎஸ் 6 வாகனங்கள் விலை உயர்வு ஆகியவற்றைக் கண்டித்து, லாரி உரிமையாளர்கள் நாளை வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனர். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 12 மணி நேரம் இப்போராட்டம் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளனர்.
போராட்டத்தில் சென்னை லாரி உரிமையாளர்கள் சங்கம், தண்ணீர் லாரி சங்கம், டிப்பர் லாரி உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் கலந்து கொள்கின்றன. அடையாள போராட்டமாக, சென்னை வானகரம் அருகிலுள்ள கஜபதி பெட்ரோல் பங்க் அருகே, லாரிகளை வடம் பிடித்து இழுக்கும் போராட்டம், மாட்டு வண்டி போராட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னிந்திய மோட்டார் போக்குவரத்து சங்கம் விடுத்துள்ள இந்த அழைப்பை ஏற்று, தென்னிந்தியா முழுவதும் சுமார் 7 லட்சம் லாரிகளும், தமிழகத்தில் சுமார் 3 லட்சம் லாரிகளும் போராட்டத்தில் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெட்ரோல், டீசல் விலையை குறைக்காவிட்டால் மார்ச் 15 ஆம் தேதி முதல், அனைத்து லாரி உரிமையாளர்கள் சங்கங்கள் இணைந்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த போராட்டத்தில் கால் டாக்ஸி, ஷேர் ஆட்டோ, மினி வேன் ஆகியவற்றையும் இணைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: கோவையில் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்!