சென்னை: கோவையைச் சேர்ந்த வெங்கடேஷ் பழனிசாமி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், கரோனா தடுப்பு விதிகளை மீறியும், தனி மனித விலகலை முறையாக பின்பற்றாமலும், முகக்கவசம் அணியாமலும், திமுகவினர் நடத்தும் மக்கள் கிராம சபை கூட்டங்கள் நடத்தபடுவதாகவும், காவல் துறையினரிடம் முறையான அனுமதி பெறாமல், பொதுமக்கள் அதிகம் கூடும் இடம் மற்றும் வழிபாட்டுத் தளங்கள் அருகில் கூட்டங்கள் நடத்தபடுவதாகவும், இந்த கூட்டங்களில் மற்ற கட்சிகள் குறித்து பொது மக்களிடம் தவறான கருத்துக்கள் பரப்பட்டு வருவதாகவும், கோவையில் நடந்த மக்கள் கிராம சபை கூட்டத்தில், கேள்வி எழுப்பிய பெண் தாக்கப்பட்டதாகவும் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
அதேபோல், பத்திரிகையாளர்கள் பேட்டியின்போது மூத்த ஐபிஎஸ் அலுவலரை மிரட்டும் வகையில் உதயநிதி ஸ்டாலின் பேசியதையும் குறிப்பிட்டுள்ள அவர், திரையரங்குகளில் 50 விழுக்காடு இருக்கைகளுக்கு மட்டுமே உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில், திமுக நடத்தும் மக்கள் கிராம சபை கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரியிருந்தார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: 'ரசிகர் கூட்டத்தை திரையரங்க உரிமையாளர்களே கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்'