சென்னை: மைலாப்பூர் சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள தனியார் வங்கியில் துணை மேலாளராக பணியாற்றி வருபவர் பாரதிபிரியா(41). இவர் கடந்த 13ஆம் தேதி மைலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், மைலாப்பூர் சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள தனது வங்கியின் ஏடிஎம் மையத்திற்கு கடந்த 12ஆம் தேதி தொழில்நுட்பப் பிரிவு ஊழியர்கள் பழுது பார்க்க சென்றனர். அப்போது ஏடிஎம் எந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி மற்றும் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அதோடு அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, 11ஆம் தேதி ஏடிஎம் மையத்திற்கு வந்த அடையாளம் தெரியாத இருவர் ஸ்கிம்மர் கருவி மற்றும் ரகசிய கேமராவை பொருத்தி சென்றது பதிவாகி உள்ளது. ஆகவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். அப்போது அந்த இரண்டு நபர்களும் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தின் பதிவு எண் சிசிடிவி காட்சிகள் மூலம் கிடைத்தது. அந்த எண் பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த மனோகர்(58) உடையது என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், மனோகர் பழைய வண்ணாரப்பேட்டையில் சொந்தமாக துணி கடை நடத்தி நஷ்டம் அடைந்தவர்.
இதனால் அவரும் அவரது மகன் ஆனந்த்குமார் என்பவரும் ஏடிஎம்மில் ஸ்கிம்மர் கருவி பொருத்தி பணத்தை கொள்ளையடிக்க திட்டமிட்டனர். அதன்படி கடந்த 11ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்று மயிலாப்பூர் ஈஸ்ட் மாதா தெரு மற்றும் சாந்தோம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இரு ஏடிஎம்மில் ஸ்கிம்மர் கருவி மற்றும் ரகசிய கேமராவை பொருத்திவிட்டு சென்றனர். அதன்பின் மறுநாள் ஏடிஎம்மிற்கு சென்று பார்த்துள்ளனர்.
அப்போது சாந்தோம் நெடுஞ்சாலை ஏடிஎம்மில் வைக்கப்பட்ட ஸ்கிம்மர் கருவி காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனால் மற்றொரு ஏடிஎம்மில் பொருத்திய ஸ்கிம்மர் கருவியையும் எடுத்துவிட்டு, தலைமறைவாக திட்டமிட்டனர். இதில் ஆனந்த் உடனடியாக விமானம் மூலமாக டெல்லிக்கு தப்பி சென்றார்.
மனோகர் (58) மாட்டிக்கொண்டார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் தலைமறைவான ஆனந்த் எம்பிபிஎஸ் படிப்பை பாதியில் நிறுத்தியவர். தற்போது ஹரியானாவில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனால் தனிப்படை போலீசார் அங்கு விரைந்துள்ளனர். தெரியவந்துள்ளதால் அங்கு தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர். இதனிடையே மனோகர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையும் படிங்க: என்னையும் என் மகனையும் அண்ணன், தம்பி என நினைப்பார்கள்… முதலமைச்சர் ஸ்டாலின்