பீர்க்கன்கரனை பஞ்சாயத்தால் பராமரிக்கப்பட்டு வரும் பீர்க்கன்கரனை குப்பைக் கிடங்கில் சேரும் குப்பைகளை அறிவியல் ரீதியாக அழிக்காமல், ஒப்பந்ததாரர்கள் மற்றும் பஞ்சாயத்து அலுவலர்கள் இணைந்து தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீயை பல மணி நேர முயற்சிக்கு பின்னர், தீயணைப்புத் துறையினர் அணைத்தனர்.
இதனால், அருகில் வசிப்பவர்களுக்கு மூச்சுத்திணறல் மற்றும் சுவாசப் பிரச்னைகள் ஏற்படுவதாக நாளிதழ்களில் வெளியான செய்தியின் அடிப்படையில், தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தாமாகவே முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
வழக்கை விசாரித்த நீதித்துறை உறுப்பினர் கே.ராமகிருஷ்ணன், நிபுணத்துவ உறுப்பினர் சாய்பால் தாஸ் குப்தா அடங்கிய அமர்வு, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மூத்த அலுவலர், கிராம பஞ்சாயத்தின் கூடுதல் இயக்குநர் கொண்ட குழு ஒன்றை அமைத்துள்ளது.
மேலும், இக்குழு பஞ்சாயத்து நிர்வாகத்தால் குப்பைகள் எப்படி சேகரிக்கப்படுகிறது, கழிவுகள் எப்படி அழிக்கப்படுகிறது, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் என்ன ஒழுங்கு நடவடிக்கைகள் எடுத்துள்ளது? என நேரில் ஆய்வு செய்து 2 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழுவிற்கு தேவையான உதவிகளை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் செய்து தர வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் 4ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
இதையும் படிங்க: சென்னையில் தொய்வின்றி நடக்கும் கழிவுநீர் சுத்திகரிப்பு பணி