கோவையில் கடந்த 18ஆம் தேதி மூன்று கோயில்கள் அடையாளம் தெரியாதவர்களால் சேதப்படுத்தப்பட்டது. இதற்கு பாஜகவின் எச்.ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில், கோவையில் கோயில்களை சேதப்படுத்தியது பெரியார் திராவிடர் கழகத்தினர் என்றும், அவர்களை உடனடியாக குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் எனவும் பதிவிட்டிருந்தார்.
மேலும், பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன் பெயரையும் அதில் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், கோயில்கள் சேதப்படுத்தப்பட்டது தொடர்பாக கஜேந்திரன் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதனையடுத்து, பெரியார் திராவிடர் கழகத்தின் சென்னை மாவட்ட செயலாளர் குமரன், காவல் ஆணையரிடம் இன்று புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், கோவை கோயில் சேத விவகாரத்தில் தங்கள் இயக்கத்தையும், பொதுச்செயலாளரையும் தொடர்பு படுத்தி பொய்யான தகவல்களை பரப்பி, இருபிரிவினரிடையே கலவரத்தை தூண்டும் வகையில் செயல்பட்ட எச்.ராஜா மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.
இதையும் படிங்க: கோவையில் தந்தை பெரியார் சிலை அவமதிப்பு - பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம்