சென்னை: குரோம்பேட்டை சூர்யா அவென்யூ பகுதியில் போடப்பட்டுள்ள பாதாளசாக்கடை திட்டம் சரியாக முறைப்படி அமைக்கபடாததால் பல்வேறு இடங்களில் உடைப்பு ஏற்பட்டு கழிவு நீராக சாலைகளில் ஓடுகிறது.
இதனால் கழிவு நீர்களில் கொசுக்களும் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் பள்ளி மாணவ, மாணவியர், குழந்தைகள், முதியோர் யாரும் வெளியே நடக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து பல்லாவரம் சட்டப்பேரவை உறுப்பினர், தாம்பரம் மாநகராட்சி அலுவலர்களிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
மேலும், சாலைகளில் கழிவுநீர் தேங்கி குட்டை போல் உள்ளது. சேரும் சகதியுமாக இருப்பதால் சாலையை கடந்துசெல்ல முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
எனவே உடனடியாக தாம்பரம் மாநகராட்சி அலுவலர்கள் விரைந்து நடவடிக்கை எடுத்து பாதாள சாக்கடையிலிருந்து வெளியேறும் தண்ணீரை அடைத்து சேதமடைந்துள்ள சாலையை சீரமைத்து தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: மழைநீர் வடிகால் பணிகளை முடிப்பதற்கு கால நீட்டிப்பு கேட்கும் ஒப்பந்ததாரர்கள்