சென்னை தாம்பரம் அருகே வேங்கைவாசலில் உள்ள தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழநெடுமாறனை, மரியாதை நிமித்தமாக பேரறிவாளன் மற்றும் அவரது தாயார் அற்புதம்மாள் ஆகியோர் நேரில் அவரது இல்லத்திற்குச் சென்று சந்தித்து, சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் சுமார் அரைமணி நேரம் பழநெடுமாறன் குடும்பத்தாருடன் உரையாடினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பழ.நெடுமாறன், “சட்டத்தில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி அமைச்சரவை இயற்றிய மசோதாக்களை ஆளுநர்கள் காலம் தாழ்த்துகிறார்கள். அமைச்சரவையில் உள்ளவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்பதால் அமைச்சரவையில் இயற்றப்படும் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவேண்டும்.
ஆளுநர் குடியரசுத்தலைவரால் நேரடி நியமிக்கப்பட்டவர் தான். அவருக்கு என தனி அதிகாரம் கிடையாது. சட்டப்பேரவை தீர்மானத்தின் மீது எவ்வளவு நாட்களில் நடவடிக்கை என குறிப்பிடப்படவில்லை என்பதைப் பயன்படுத்தி, அவர்கள் அமைச்சரவை சட்டத்தின் மீது ஒப்புதல் அளிக்க தாமதப்படுத்துகிறார்கள்’ என்றார்.
அதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பேரறிவாளன், ' ஏழுபேர் விடுதலைக்காக ஐயா தனி வழக்கறிஞர் வைத்து வழக்கு நடத்தினார். அவரது குடும்பத்தாருக்கும் எங்களுக்கும் நல்ல உறவு உண்டு. அந்த நன்றிக்காக சந்திக்க வந்துள்ளேன்’ என்றார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி விரைவில் அமைக்கப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்