வரும் சட்டப்பேரவை தேர்தலுக்கான மக்கள் நீதி மய்யத்தின் 43 பேர் கொண்ட இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் கமல் ஹாசன் இன்று வெளியிட்டார். அதன்படி, கோவை தெற்கு தொகுதியில் கமல் ஹாசனும், தி.நகரில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பழ.கருப்பையாவும், மயிலாப்பூரில் நடிகை ஸ்ரீப்ரியாவும், சிங்காநல்லூரில் மநீம துணைத்தலைவர் மகேந்திரனும் போட்டியிடுகின்றனர்.
பின்னர் பேசிய கமல், "நேற்று முன் தினம் வெளியிடப்பட்ட மக்கள் நீதி மய்யத்தின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் தற்போது பேசு பொருளாகியுள்ளது. தமிழ்நாடு இதுவரை எனக்கு கொடுத்த செல்வமும், புகழும் இன்னும் இரண்டு ஜென்மங்களுக்கு போதுமானது. அரசியல் என் தொழில் அல்ல, என் கடமை என்று நம்பி வந்திருக்கும் இக்கூட்டத்தின் தலைவனாக இருப்பது முதல் பெருமை.
பெரிய மாற்றத்தை நேர்மையானவர்கள் தான் கொண்டு வந்துள்ளனர். காந்தி, கலாம், கமல் வரையில் அவ்வாறே செய்வார்கள். கொங்கு செழித்தால் எல்லாம் செழிக்கும் என்பார்கள். ஆனால், கொங்கு ஊழல் கோட்டையாக மாறி இருப்பதால், அதை மாற்றி அமைக்கவே கோவை தெற்கில் போட்டியிடுகிறேன்” என்றார்.
தொடர்ந்து பேசிய தி.நகர் வேட்பாளர் பழ.கருப்பையா, "தமிழகத்தை சீரமைக்க வந்துள்ளவர் கமல் ஹாசன். வெகுகாலம் ஊழல் என்ற நிலையில் இருந்து, தமிழகம் மாறி செல்ல வேண்டும். சில கட்சிகள் சொற்ப இடங்களுக்காக தங்களது அடையாளத்தையே இழந்து செல்கின்றனர்.
எங்களில் யார் வேண்டுமானாலும் முதல்வராகலாம் என்று ஒரு கட்சியும், வழி வழியாக நாங்கள் தான் முதல்வர் என்று ஒரு கட்சியும் இருந்து வருகிறது. மூன்றாம் அணி எப்படி ஜெயிக்க முடியும் என்கிறார்கள். மூன்றாம் அணியாகத் தான் எம்.ஜி.ஆரும் வந்தார்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தேர்தல் களத்தில் கமல்; கோவை தெற்குத் தொகுதியில் போட்டி!