சென்னை: மும்பை செல்ல வேண்டிய விமானம் மதுரையிலிருந்து சென்னை உள்நாட்டு முனையத்திற்கு இரவு 7 மணிக்கு வந்தது. இதில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் உள்பட 93 பயணிகள் வந்தனர்.
இதில் சில பயணிகள் இறங்கியதும் மும்பைக்குச் செல்ல வேண்டிய பயணிகள் ஏற வேண்டும். ஆனால் ஒரு பயணி மட்டும் இறங்கவில்லை எனத் தெரியவந்தது. உடனே விமான பணிப்பெண்கள் சென்று பார்த்தபோது மதுரையைச் சேர்ந்த சண்முகசுந்தரம் (72) இருக்கையில் படுத்திருப்பதைக் கண்டனர்.
உடனே அவரை பணிப்பெண்கள் எழுப்ப முயன்றபோது எழுந்திருக்காததால், மருத்துவக் குழுவினருக்குத் தகவல் தந்தனர். மருத்துவக் குழுவினர் வந்து பரிசோதனை செய்தபோது சண்முகசுந்தரம் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். பின்னர் விமான நிலைய காவல் துறையினர் சண்முக சுந்தரத்தின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அனுப்பிவைத்து, வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனர்.
மதுரையிலிருந்து சென்னையில் உள்ள மகள் வீட்டிற்கு வந்தபோது, உயிரிழந்ததது எனத் தெரியவந்தது. இதையடுத்து மும்பை செல்ல வேண்டிய பயணிகள் இறக்கப்பட்டு சுத்தம்செய்த பின்னர் விமானம் தாமதமாகப் பயணிகளை ஏற்றிக்கொண்டு மும்பைக்குப் புறப்பட்டுச் சென்றது.
இதையும் படிங்க: விவசாய நிலத்தில் புகுந்த மலைப்பாம்பு