சென்னை: தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பது குறித்து 7,370 மேல்நிலைப் பள்ளிகள்; 5,330 உயர்நிலைப் பள்ளிகள் என 12,700 பள்ளிகளில் நவம்பர் 9ஆம் தேதி கருத்துக் கேட்கவும், அதனை கல்வித் துறை அலுவலர்கள் உறுதிசெய்யவும் பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கரோனா பெருந்தொற்று காரணமாக மார்ச் 25ஆம் தேதி முதல் பள்ளிகள் மூடப்பட்டன. அதனைத் தொடர்ந்து 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. ஆனால், 10ஆம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான தேர்வு செப்டம்பர் மாதம் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பள்ளிகள் திறப்பது குறித்து பல்வேறு கட்டங்களில் அலுவலர்கள் ஆலோசனை நடத்தினர்.
தற்போது, கோவிட்-19 நோய்த் தொற்று படிப்படியாக மாநிலத்தில் குறைந்து வரும் சூழலில், மத்திய அரசு, செப்டம்பர் 30 அன்று வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி , அக்டோபர் 15ஆம் தேதிக்குப் பிறகு சூழ்நிலைக்கு ஏற்ப பள்ளிகளை மாநில அரசுகள் படிப்படியாக திறக்க அனுமதித்துள்ளது.
நவம்பர் 16ஆம் தேதி முதல் 9, 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் உரிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பள்ளிகளைத் திறந்திடலாம் என முதலமைச்சர் அறிவித்தார். ஆனால், இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின. அதனைத் தொடர்ந்து பள்ளிகள் திறப்பது குறித்து கருத்துக் கேட்க பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்து அறிவித்துள்ளது.
பள்ளிக் கல்வித் துறையின் மூலம் பெறப்படும் கருத்தின் அடிப்படையிலும், பண்டிகை காலங்கள் முடிந்த பின்னர் கரோனா தொற்றின் நிலையைக் கருத்திற்கொண்டும் உயர் கல்வித் துறை கல்லூரிகளை திறப்பது குறித்து முடிவு செய்ய திட்டமிட்டுள்ளது.
மத்திய அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி அந்தந்த அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பெற்றோர், பெற்றோர்-ஆசிரியர் சங்க நிர்வாகிகளிடமும், தனியார் பள்ளிகளின் நிர்வாகத்துடனும் பள்ளிகள் திறப்பது குறித்து நவம்பர் 9ஆம் தேதி கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்படவுள்ளது.
இந்த கருத்து கேட்புக் கூட்டம், அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களின் தலைமையில் காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம் என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது. இதில் கலந்துகொள்ள இயலாதவர்கள் கடிதம் மூலமாக தங்களின் கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்றும் கூறியுள்ளது.
இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவின் அடிப்படையில் அந்தந்த பள்ளிகளைத் திறப்பது குறித்து அரசால் முடிவு எடுக்கப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது. இச்சூழலில், தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பது குறித்து 7,370 மேல்நிலைப் பள்ளிகள், 5,330 உயர் நிலைப் பள்ளிகள் என 12,700 பள்ளிகளில் கருத்துக் கேட்கப்படவுள்ளன.
இந்த கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெறுவதை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள், ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர்கள் என கல்வித் துறை அலுவலர்களை ஒவ்வொருப் பள்ளிக்கும் நியமித்து அதனை உறுதிச் செய்யவும் பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
அதுமட்டுமில்லாமல், தனியாா் பள்ளிகளில் கருத்துக் கேட்கப்படுவதை கல்வித் துறை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டுமெனவும், அதன் அறிக்கையைத் தயாரித்து பள்ளிக் கல்வித் துறைக்கு அனுப்பவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன.