சென்னை: சட்டத்துறை மானிய கோரிக்கை விவாதத்தின் போது பேசிய பண்ருட்டி சட்டப்பேரவை உறுப்பினர் வேல்முருகன், "நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக உரிமையை எப்பாடுபட்டாவது தமிழ்நாடு அரசு பெற்றுத்தர வேண்டும்.
சிறையில் 7 ஆண்டுகளுக்கு மேல் இருப்பவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றார். வடகிழக்கு மாநிலங்களில் உள்ளதைப்போல் தமிழ்நாட்டிற்க்கு வெளிமாநிலங்களிலிருந்து எவ்வளவு பேர் வருகிறார்கள், என்ன வேலை செய்கிறார்கள், எங்கு தங்குகிறார்கள் போன்ற விவரங்கள் சேகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்தார்.
தமிழ்நாட்டில் வட இந்தியர்கள் ஒன்றிய, மாநில அரசு வேலைகளில் ஆயிரக்கணக்கில் வரக்கூடிய சூழல் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் செம்மரக் கடத்தல் விவகாரத்தில் ஆந்திர, கர்நாடக சிறைகளில் உள்ள தமிழர்களை விடுவிக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விசாரணை கைதி மரணம் போன்ற சம்பவங்கள் இல்லாத சூழல் வரவேண்டும். மண்ணுக்காகவும், மக்களுக்காகவும், மொழிக்காகவும் போராடுபவர்களை சிறையில் உடையை கழற்றுங்கள்... அங்க அடையாளங்களை பார்க்க வேண்டும் எனக் கூறுவது சரியான நடைமுறை அல்ல. இது வெள்ளைக்காரன் காலத்து நடைமுறை, இதனை மாற்ற வேண்டும்", என்றார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் ரகுபதி, "சிறைச்சாலையில் அங்க அடையாளங்களை பார்க்கக் கூடாது எனக் கூறுவது சரியானதல்ல. சிறையில் உள்ளே சென்று, வெளியே வருபவர்களை அங்கு காணாமல் போனவர்களையும் கண்டுபிடிப்பதற்கு அங்க அடையாளங்கள் உதவும். சிறையில் மரியாதையாக நடத்துங்கள் என கூறுங்கள் அதற்கான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொள்கிறோம்.
சிறையில் உற்பத்தி செய்யப்படும் பொருள்கள் காவல்துறை, தீயணைப்புத் துறை, மருத்துவத் துறை ஆகியவற்றுக்கு என அரசுக்கே பயன்படுத்தப்படுகிறது. சிறையில் உற்பத்தி செய்யும் பொருள்கள் வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுவதில்லை. கச்சா பொருளை சிறைக்கு அரசு கொடுக்கிறது. உற்பத்தி செய்த பொருள்களை அரசே கொள்முதல் செய்து கொள்கிறது", எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தஞ்சாவூர் தேர் விபத்து - குடியரசுத் தலைவர் இரங்கல்!