சென்னை: ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று (மே 28) 43ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு சார்பாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்று ஆலோசனை வழங்கினார்.
இந்நிலையில், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று (மே 29) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "ஜிஎஸ்டி வரி முறை அடிப்படை இழந்து தடுமாறி வருகிறது. ஜிஎஸ்டி வரி முழு ஆய்வு செய்யாமல் கொண்டுவரப்பட்டது. ஜிஎஸ்டி வரி முறையில் மாற்றம் கொண்டுவந்தால்தான் ஜிஎஸ்டி வரியானது நீடிக்க முடியும். தமிழ்நாடு போன்ற பெரிய மாநிலங்களுக்கு கவுன்சில் கூட்டத்தில் பேசுவதற்கான போதிய நேரம் வழங்கப்படவில்லை.
ஜிஎஸ்டி கவுன்சிலில் ஒரு மாநிலத்துக்கு ஒரு வாக்கு என்று நிர்ணயிக்கப்ட்டுள்ளது தவறான முறை. ஒவ்வொரு மாநிலங்களின் வருவாய், பொருளாதாரம், மக்கள் தொகை, உற்பத்தி மதிப்பு, நுகர்வு மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில்தான் வாக்கு இருக்க வேண்டும்.
பெரிய மாநிலங்களில் இருந்து ஈட்டப்படும் வருவாய் என்பது சிறிய மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது. மாநிலங்களில் இருந்து பெற்று ஒன்றிய அரசு தரும் நிதி தமிழநாட்டிற்கு 30 விழுக்காடு அளவுக்கே உள்ளது. பெட்ரோல், டீசல் ஆகியவற்றை ஜிஎஸ்டி கட்டுப்பாட்டில் கொண்டுவருவது சாத்தியமில்லை" என்றார்.
இதையும் படிங்க: ஜிஎஸ்டி பகிர்வில் வளர்ந்த மாநிலங்களுக்கு அநீதி: பிடிஆர் அதிரடி பேச்சு